தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும்

தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் (பொ.ஆ.800- 1500), நொபொரு கராஷிமா, எ.சுப்பராயலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட், பக்.84, விலை ரூ.70.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நொபொரு கராஷிமா ஒரு கல்வெட்டியியலாளர்; சமூக வரலாற்று ஆய்வாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருந்தவர். எ.சுப்பராயலு சமூக வரலாற்று ஆய்வாளர். இவர்களிருவரும் தமிழகத்தில் சோழர் காலத்தில் (பொ.ஆ. 800 -1500) நிகழ்ந்த சமூக மாற்றங்களை ஆய்வு செய்து கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள்.‘

‘தமிழ்நாட்டில் தீண்டாதார்‘, ‘புதிய ஓம்படைக்கிளவிகளின் எழுகையும் சாதி உருவாக்கமும்‘ என்ற நொபொரு கராஷிமாவின் இரு கட்டுரைகளும் , ‘சோழர் காலத்தில் சமூக மாற்றத்தின் சில தன்மைகள்‘, ‘பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் ஓர் உழவர் கிளர்ச்சி என்ற எ.சுப்பராயலுவின் இரு கட்டுரைகளும் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

‘வரலாற்று ஆய்வுகள் பண்டைய காலம் குறித்து கவனம் செலுத்தினாலும், அவை தொடக்கப்புள்ளியாக நிகழ்காலத்தைக் கொள்ள வேண்டும்‘ என்ற அடிப்படையில் இந்நூலில் கட்டுரைகள் சோழர்கால வரலாற்றை ஆராய்கின்றன.

முதலாம் ராஜராஜன் காலத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் சாதிமுறையில் கீழ்நிலையில் வைக்கப்பட்டிருந்த மக்கள் வாழ்ந்த இடங்களைப் பற்றிய குறிப்புகள், சாதிப் படிநிலை பற்றிய குறிப்புகள் காணப்படுவது, திருச்சி மாவட்டம் திருப்பாலத்துறையில் உள்ள ஒரு கல்வெட்டில் அடிமைமுறை இருந்ததற்கான சான்றுகள் இருப்பது ஆகியவை இந்நூலில் கூறப்பட்டுள்ளன.

வைதிகச் சடங்குகள் செய்தவர்கள், கோயில் பூசைகளோடு நெருங்கிய தொடர்புடையவர்கள், போரில் ஈடுபட்ட வர்கள் பிற்காலத்தில் நிலவுடையாளர்களாக மாறியது, முதல் இராஜராஜன் காலத்தில் இருந்து சோழப் பேரரசர்கள் செய்த பல போர்களின் காரணமாக மக்கள் இடம் பெயர்ந்தது, சோழர் படையில் முக்கிய இடத்தை வகித்த பல மக்கள் பிரிவினர் 14 – 15 ஆம் நூற்றாண்டுகளில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டது, 1429 ஆம் ஆண்டு நிகழ்ந்த உழவர் கிளர்ச்சி என பலராலும் அறியப்படாத பல அரிய தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

தமிழக வரலாற்றைத் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் பயன்படும் சிறந்த நூல்.

நன்றி: தினமணி, 29/1/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *