விடுதலைப் போர் தெரிந்த பெயர்கள் தெரியாத தகவல்கள்
விடுதலைப் போர் தெரிந்த பெயர்கள் தெரியாத தகவல்கள், ஆர்.பி.வி.எஸ். மணியன், அத்வைத் பப்ளிஷர்ஸ், பக். 200, விலை 120ரூ.
இன்றைய தலைமுறையினருக்கு அந்நியர்களிடம் குறிப்பாக வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நம்நாட்டை மீட்டெடுக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்த நம் விடுதலைப் போராட்ட வீரர்களின் அருமை, பெருமைகளை நினைவூட்டுவது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
காரணம், தேச விடுதலை என்றால் என்ன, அந்நியர்களிடம் தேசம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது நாட்டில் நடந்த நிகழ்வுகள் என்ன, அதனால் மக்கள் அன்றாடம் அடைந்த துயரங்கள் என்ன… என்பன போன்ற நெஞ்சை உருக்கும் விபரங்கள் இன்றைய தலைமுறைக்கு போதிய அளவுக்குத் தெரியவில்லை. அதன் விளைவே தேசப்பற்று குறைபாடுகளுக்கும் காரணமாக உள்ளது. இதை உணர்ந்தே விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் மாநிலத் தலைவரான இந்நூலாசிரியர், விடுதலைப் போரில் குறிப்பாக ஹிந்து சமயத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களின் பணிகளைப் பற்றி மட்டும் இந்நூலில் தொகுத்துள்ளார்.
அத்துடன் விடுதலைப் போராட்டத்தின் போது நடந்த சில வெளிவராத தகவல்களையும் இணைத்து குறிப்பிட்டுள்ளது படிப்பதற்கு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சிவகங்கை சீமையின் பெரிய மருது, ஜான்ஸி ராணி லக்ஷ்மி பாய், சுவாமி விவேகானந்தர், வாஞ்சிநாதன், நீலகண்டன், மதன்லால் திங்கரா, செண்பகராமன் பிள்ளை, வ.வே.சு.ஐயர், பாரதியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, திருப்பூர் குமரன்… இப்படி பல போராட்டத் தலைவர்களின் தகவல்களுடன், இறுதியில் ஆர்.எஸ்.எஸ்.ஸைத் தோற்றுவித்த டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் குறித்த தகவல்களையும் இந்நூலில் படித்துணரலாம்.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 21/12/2017.