இதழாளர் பாரதி
இதழாளர் பாரதி,பா.இறையரசன், யாழிசைப் பதிப்பகம், பக்.326, விலை ரூ.300.
பாரதியை பலரும் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்த நிலையில் இந்த நூலில் ஐந்து தலைப்புகளில் பாரதியை பத்திரிகையாளராக முன்னிலைப்படுத்தி ஆராய்ந்துள்ளார் நூலாசிரியர்.
பாரதியாரின் இதழியல் நடை எனும் கட்டுரையில், பாரதி கூற்றாக, கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமமென்பது என்னுடைய கட்சி. எந்த ஒரு விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை, அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம், எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது என்று குறிப்பிட்டு விளக்கியுள்ளார். பாரதி காலத்துக்கு முன்பு இதழியல் நடை எப்படி இருந்தது என்பதை வீரமாமுனிவர், அனந்தரங்கம் பிள்ளை என பலரது உரைநடைகளை குறிப்பிட்டுக்காட்டி, அதிலிருந்து பாரதி எப்படி வேறுபட்ட நடையைக் கையாண்டார் என விளக்கியிருப்பது சிறப்பு. இது இன்றைய இதழியலாளாருக்கும் பயன்படுகிற விஷயமாகும்.
பாரதியின் வாழ்க்கையே இதழியல் சார்ந்த நிலையிலேயே இருந்தது என்பதை பாரதியின் படிநிலை வளர்ச்சி கட்டுரையில் விவரிக்கும் நூலாசிரியர், பெண்கள் முன்னேற்றத்தை முன்னிலைப் படுத்திய பாரதி சக்கரவர்த்தினியைத் தொடங்கியதைக் குறிப்பிடுகிறார். அவரது கவிதை போன்ற இலக்கியங்களும் கூட இதழியல் துறையில் ஏற்ற, இறக்க சூழலுக்கு ஏற்ப எழுதப்பட்டவையே என்பதையும் நூலாசிரியர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரதி தான் வாழ்ந்த காலம் முதல் தற்காலம் வரை பொருந்துகிற பல கருத்துகளைக் கூறிய படைப்பாளியாக இருக்கிறார் என்பதையே இதழாளர் பாரதி நமக்கு படம்பிடித்துக்காட்டுகிறது. பாரதியை முழுமையாக அறிய விரும்பும் இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் வைத்திருக்கவேண்டிய அரிய பொக்கிஷம் இந்நூல் என்பதில் சந்தேகமில்லை.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026604.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: தினமணி, 16/4/2018.