ஐம்பெருங்காப்பியங்களும் தமிழர் வாழ்வும்
ஐம்பெருங்காப்பியங்களும் தமிழர் வாழ்வும், கி.நெடுஞ்செழியன், வளர்மதி பதிப்பகம், விலை 200ரூ.
மயிலாடுதுறையில் வழக்குரைஞராகப் பணியாற்றும் இந்நூலாசிரியர், ‘தமிழ்மாமணி’ விருதும், ‘கரைகண்டம்’ என்ற புனைப்பெயரும் பெற்றவர். இவர் தமிழில் கரை காண முயற்சித்திருப்பது இந்நூலின் மூலம் அறியமுடிகிறது.
2000 ஆண்டுகளுக்கு முன், மதுரையில் தமிழ்க் கடைச்சங்கம் தோன்றிய காலத்தில் உருவான தமிழ் இலக்கியங்கள் பல. அவற்றில் ஐம்பெருங்காப்பியங்களும் உண்டு. அதில் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி ஆகியவை சமணக் காப்பியங்கள் என்றும், மணிமேகலை, குண்டலகேசி ஆகியவை பௌத்த காப்பியங்கள் என்றும் கூறப்படுவதுண்டு.
இக்காப்பியங்கள் அச்சமயக் கொள்கைகளைப் போதிப்பதில்லை. ஆனால், அச்சமயத்தைப் பின்பற்றியவர்களின் வாழ்க்கை நியதிகளை எடுத்துரைப்பவை. தவிர, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி இவை மூன்றும் வணிகக் குடிகளின் வாழ்வு நிலைகளையும், சீவகசிந்தாமணி, குண்டலகேசி இவை இரண்டும் அரசர் குடிகளின் வாழ்க்கை நிலைகளையும், அரசியல் பூசல்களையும் எடுத்துக் காட்டும் காப்பியங்கள்.
இந்நூலில் இக்காப்பியங்கள் குறித்தும், அவற்றின் மூலம் அன்றைய தமிழ் மக்களின் வாழ்க்கை முறையை – அதாவது நாகரிகம், பண்பாடுகள், இறைநம்பிக்கைகள், இயற்கை வழிபாடு, உணவுப் பழக்க வழக்கங்கள், கற்புக் கோட்பாடு, திருமண முறைகள், அணிகலன்கள், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலப்பகுதிகளில் தமிழர் கண்ட வாழ்க்கை நிலைகள், வானியல் அறிவியல், பாவம், புண்ணியம், சூழ்ச்சி, மந்திரம், துறவு என்று பலவற்றையும் ஆய்வு செய்துள்ளார் இந்நூலாசிரியர்.
ஆக, ஐம்பெருங்காப்பியங்களையும் அலசி ஆராய்ந்து, தனது கருத்துக்களை எளிய தமிழ் நடையில் இந்நூலில் ஒன்றாக்கித் தந்துள்ளது பாராட்டத்தக்கது.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
-பரக்கத்.
நன்றி: 25/4/2018.