சங்கப் பனுவல்கள் – தொகுப்பு மரபு – திணை மரபு
சங்கப் பனுவல்கள் – தொகுப்பு மரபு – திணை மரபு, சுஜா சுயம்பு, சந்தியா பதிப்பகம், பக்.136, விலை ரூ.135.
ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சங்க இலக்கியங்கள் என்று கூறப்படுபவை கி.மு.550 முதல் கி.பி.600 வரை படைக்கப்பட்ட பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. பல்வேறு காலங்களின் பல்வேறு வாழ்நிலைகளைச் சித்திரிக்கும் இந்தப் பாடல்களில் கூறப்படுபவை, தொடக்க காலத்தில் படைக்கப்பட்ட பாடல்களிலிருந்து கடைசியில் படைக்கப்பட்ட பாடல் வரை ஒன்றாகவே இருக்க வாய்ப்பில்லை.
மேலும் அவற்றிற்கு உரையெழுதியவர்கள், பதிப்பித்தவர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தின், அவர்களின் கருத்துநிலையில் இருந்துதான் சங்க நூல்களில் காணப்படுபவை பற்றி விவரித்திருக்க இயலும்.
சங்கப் பாடல்களில் அடிப்படைப் பொருண்மையும், திணைப் பகுப்பும் பல இடங்களில் ஒன்றுபடுவதில்லை. திணைக் கோட்பாட்டைப் புரிந்து கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன.
‘இலக்கியம் மேன்மை மிக்கவர்களையே சித்திரிக்க வேண்டும்‘ என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையிலேயே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் புலையர், இழிசினர் ஆகியோருக்கு தமிழ்ச் சமூக வரலாற்றில் உரிய பதிவுகள் இடம் பெறவில்லை.
சங்க பெண்பாற் புலவர்கள் எவரும் பரத்தையர் பற்றி பேசவில்லை. ஆண் புலவர்களே பரத்தையர் பற்றி கூறியிருக்கின்றனர்.
காலம், சூழ்நிலைகளுக்கேற்ப சொற்கள் பல்வேறு பொருள்களையும், அவற்றில் மாற்றங்களையும் பெறுகின்றன. தோட்டி என்னும் சொல்லும் அத்தகைய மாற்றங்களைப் பெற்றிருக்கிறது.
இவ்வாறு இந்நூல் முழுக்க சங்க இலக்கியங்கள் தொடர்பான பல அரிய ஆய்வுத் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. பழைய இலக்கியங்களை ஆய்வுக் கண்ணோட்டத்தில் பார்ப்பது இன்றையத் தேவை என்பதை நூலைப் படிக்கும்போது உணரமுடிகிறது.
நன்றி: தினமணி, 11/6/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818