இவனன்றோ என் நண்பன்
இவனன்றோ என் நண்பன், சூ.குழந்தைசாமி, காந்தி அமைதி நிறுவனம், பக்.72, விலை ரூ.20.
காந்திய நெறி பரப்பும் பணியில் தனது இளமைக்காலம் முதல் ஈடுபட்டு வரும் நூலாசிரியர், தனது வாழ்வில் நடந்த பல சுவையான நிகழ்ச்சிகளை இந்நூலில் தொகுத்து வழங்கியிருக்கிறார். சிறுவயதில் ஒன்றுக்கும் உதவாதவராக இருந்த அவர் 21 வயதில் ஒரு 52 வயது நண்பரைச் சந்திக்கிறார். அவர் டி.டி.திருமலை. அவரைச் சந்தித்த நாள் முதல் அவரின் வழிகாட்டலில் தனது வாழ்க்கை எவ்வாறு நல்லவிதமாக மலர்ந்தது என்பதை பல நிகழ்வுகள் மூலம் மிகவும் சுவையாக இந்நூலில் எழுதிச் செல்கிறார் நூலாசிரியர்.
பி.இ.கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த அவர், அந்தப் படிப்புக்குரிய வேலையைச் செய்யாமல், காந்திய நெறி பரப்பும் பணியில் சிறிய இதழ்களை வெளியிடுவது, புத்தகங்கள் விற்பது, கூட்டங்கள் நடத்துவது என முழுக்க முழுக்க பொதுப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். உழைப்பையும் அதில் வரும் பலனையும் தொடர்புபடுத்தாமல், நீதி, அன்பு, அறம் தழைக்கச் செய்யும் செயல்களை மட்டுமே செய்கிறார்.
இவருடன் இன்ஜினியரிங் படித்த நண்பர் ஒருவர் அமெரிக்காவில் குடியேறிவிட்டார். அவர் இவருக்கு அனுப்பிய இ மெயிலில், குழந்தை, நிறைய சம்பாதித்துவிட்டேன். ஆனால் உன்னை மாதிரி என்னால் சிரிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டிருப்பதைச் சொல்லிய நூலாசிரியர், நாம் வாழ்கிறோமா அல்லது உயிருடன் இருக்கிறோமோ? உயிருடன் இருப்பவர்கள் எல்லாம் வாழ்ந்துவிடுகிறார்களா என்ன? என்ற ஆழமான சிந்தனையில் நம்மை மூழ்கச் செய்துவிடுகிறார். எப்படி வாழ வேண்டும் என்பதை வாழ்க்கை அனுபவங்களில் இருந்து விளங்கச்செய்யும் சிறந்த நூல்.
நன்றி: தினமணி, 16/7/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818