பதினெண்கீழ்க்கணக்கு வடிவமும் வரலாறும்
பதினெண்கீழ்க்கணக்கு வடிவமும் வரலாறும், ப. திருஞானசம்பந்தம், நெய்தல்பதிப்பகம், பக்.228, விலை ரூ.200.
யாப்பிலக்கணத்தை ஆய்வுப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட எட்டு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
தமிழ் யாப்பியல் குறித்த அறிமுகத்துடன் தொடங்கும் இந்நூலில், பதினெண்கீழ்க்கணக்கு யாப்பியல் ஆய்வு வரலாறு, திருக்குறளில் யாப்பியல் குறித்து அயலக, தமிழக அறிஞர்களின் ஆய்வுகள், கீழ்க்கணக்கு இலக்கியங்களில் உள்ள புதுவகையான இன்னிசை வெண்பாக்கள், தொடை நலன்கள், தமிழில் உள்ள ஓரெதுகையின் வரலாறு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பழந்தமிழ் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள் முதலியவற்றை இந்நூல் உள்ளடக்கியுள்ளது.
களவழி நாற்பதில் இடம்பெறுகின்ற ஆறடிகளிலான பஃறொடை வெண்பாக்களின் எண்களை அ.சிதம்பரநாதனாரும், ந.வீ.செயராமனும் குறிப்பிடவில்லை. அதேபோல ஆசாரக் கோவையின் தற்சிறப்புப் பாயிரப் பஃறொடை வெண்பாவை ந.வீ.செயராமன் கருத்தில் கொள்ளவில்லை எனக் கூறும் நூலாசிரியர், இவர்கள் இருவரும் கூறாமல் விட்ட களவழி நாற்பது பாடல்களின் எண்களையும் குறிப்பிட்டு, அவை மூன்றும் பஃறொடை வெண்பாக்கள்தாம் என்பதற்கான பாடல்களையும் எடுத்துக் காட்டியுள்ளார்.
இன்னிசை வெண்பா தொல்காப்பியர் காலத்தில் இருந்த தொன்மையான வடிவம் என்பதும், பிற்காலத்தில் அதன் வளர்ச்சியே நேரிசை வெண்பா என்பதும் அறியப்படும் என்று குறிப்பிடுகின்றனர். இக்கருத்தை ந.வீ செயராமனும் வலியுறுத்துவார்.
எனினும் தொல்காப்பியர் காலத்தில் நேரிசை வெண்பா இல்லை என்று ஆய்வுலகில் குறிப்பிடப்படும் கருத்தை இவர் மறுத்துரைக்கிறார். இதற்கான காரணங்களை கீழ்க்கணக்கில் புதுவகை இன்னிசை வெண்பாக்கள் என்ற கட்டுரையில் விளக்கியுள்ளார்.
சிந்தனைக்கும் ஆய்வுக்கும் உரிய பகுதிகள் பல இதில் உள்ளன. யாப்பிலக்கணத் துறையில் ஆழங்காற்பட்ட சிலரின் வரிசையில் இந்நூலாசிரியருக்கும் இடமுண்டு.
நன்றி: தினமணி, 2/7/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818