மௌனத்தின் நிழல்

மௌனத்தின் நிழல், கர்ணன், கவிதா பப்ளிகேஷன், பக்.320, விலை ரூ.280.

விடுதலைப் போராட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு தமிழில் ஏற்கெனவே பல புதினங்கள் வந்துள்ளன. இதுவும் அவ்வகையிலானதுதான் எனினும், குறிப்பிட்ட ஓர் ஊரை மட்டுமே கதைக்களமாகக் கொண்டிருப்பதாலும், நிஜத்தில் வாழ்ந்து மறைந்தவர்களே கதாபாத்திரங்களாக இடம் பெற்றிருப்பதாலும் மற்றவற்றிலிருந்து வேறுபடுகிறது.

ஆன்மிக நகரமாக அறியப்பட்டிருக்கும் மதுரை, தென்னிந்தியாவின் அரசியல் எழுச்சிக்குக் காரணமாக இருந்ததை ஏராளமான உண்மை நிகழ்வுகள் மூலம் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.

தொடக்கத்தில் காவல்துறை அதிகாரி சேதுராமன் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வதைப் படிக்கும்போதே அந்தக் கால மீனாட்சியம்மன் கோயில் நம் மனக்கண் முன் தோன்றுகிறது. கோயில் மட்டுமல்ல, முனிச்சாலை, ஜெய்ஹிந்த்புரம், இஸ்மாயில்புரம், மேலசித்திரை வீதி, காக்காத் தோப்பு என்று அந்தக் கால மதுரையில் பயணித்த அனுபவத்தைத் தருகிறது இப்புதினம்.

ஸ்ரீநிவாச வரதர், பத்மாசினி, சிதம்பர பாரதி, கோபாலன், ரெஜினா, கனகராஜன், சுந்தரராசப்பிள்ளை, முத்துப்பிள்ளை, மாரியப்பன் என எல்லா கதாபாத்திரங்களுமே காந்திய சிந்தனையால் பாதிக்கப்பட்டவர்களாயிருக்கின்றனர்.

புதினத்தினூடே விடுதலைப் போராட்ட நிகழ்வுகளும் வந்து கொண்டேயிருக்கின்றன. வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள், வ.வே.சு. ஐயரின் குருகுலம், வாஞ்சிநாதன் ஆஷ் துரையைச் சுட்டது, கள்ளுக்கடை மறியல், பாலகங்காதர திலகரின் மதுரை வருகை, டாக்டர் வரதராஜுலு நாயுடு கைது, அவருக்காக ராஜாஜி வாதாடி அவரை விடுவித்தது – இப்படி பல முக்கிய நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.

பெரும்பாலும் உண்மைச் சம்பவங்களாகவே இடம் பெற்றிருப்பதால் புதினம் என்பதைத் தாண்டி ஓர் ஆவணத்தன்மை ஏற்பட்டிருப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

நன்றி: தினமணி, 17/9/2018.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *