தமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு)
தமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு), பாலூர் கண்ணப்ப முதலியார், பூம்புகார் பதிப்பகம், பக்.458, விலை ரூ.300.
தமிழ்மொழி, தமிழ் நூல்கள் எவ்வாறு வளர்ச்சியுற்றன; தமிழ் மொழியின் பழைமை, மாண்பு; முற்கால, இடைக்கால, பிற்கால நூல்கள், அவற்றை இயற்றிய ஆசிரியர்கள்; இக்காலப் புலவர்கள், அவர்களுடைய நூல்கள்; தமிழ் நாட்டின் தொன்மை, சிறப்பு, மக்களின் வாழ்க்கை முறை முதலியனவற்றை இலக்கிய வரலாற்றைக் கூறுவது போலக் கூறாமல், சுவையான செய்திகளையும், பாடல்களையும், மேற்கோள்களையும் இணைத்துக் கூறியிருப்பது, இந்நூலின் சிறப்பு.
சங்க காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதில் தொடங்கும் முதல் கட்டுரையிலிருந்து, முத்தமிழ் பற்றிய விளக்கம், கலை நூல்கள், முச்சங்கத்தின் வரலாறு, முச்சங்கம் பற்றிய தமிழறிஞர்களது கருத்து மாறுபாடுகள், அகத்தியரின் மாணாக்கர்கள், எட்டுத் தொகை, பத்துப்பாட்டு நூல்கள், ஐந்திணை ஒழுக்கம், பன்னிரு திருமுறைகள்- அவற்றை அருளிச் செய்தவர்கள், பெளத்த-சமண-கிறிஸ்தவ-இஸ்லாமியர்களின் தமிழ்த்தொண்டுகள், சைவ சித்தாந்த நூல்கள், இலக்கணங்கள், நிகண்டுகள், புராணங்கள், காப்பியங்கள், உரையாசிரியர்கள், பிற்கால இலக்கியங்கள், தனிப்பாடல் திரட்டு மற்றும் குமரகுருபரர், தாயுமானவர், வள்ளலார் முதலிய அருளாளர்கள், கவிராயர்கள் என அனைத்தையும் எடுத்துரைத்துள்ளார் நூலாசிரியர்.
மேலும், ஐம்பதுக்கும் மேற்பட்ட முற்கால, பிற்கால தமிழறிஞர்கள், இலக்கிய ஆளுமைகள், உரையாசிரியர்கள், பதிப்பாசிரியர்கள் பற்றிய குறிப்புகளும், அவர்கள் இயற்றிய சிறந்த பாடல்களும் தந்திருப்பது கூடுதல் சிறப்பு. சைவத் திருமடங்கள், ஆதீனங்கள், நாவல்கள், நாடகங்கள், சிறுகதைகள், பத்திரிகைகள், யாழ்ப்பாணப் புலவர்கள் எனத் தமிழ் இலக்கியம் தொடர்பான அனைத்தும் இந்நூலில் இடம் பெற்று உள்ளன.
நன்றி: தினமணி, 22/10/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818