ஞானி வாசகம் நானூறு
ஞானி வாசகம் நானூறு, தொகுப்பாசிரியர்: ஜே.மஞ்சுளா தேவி, புதுப்புனல், பக்.440, விலைரூ.390.
மார்க்சியம், தமிழ் இலக்கியம் , அரசியல், ஆன்மிகம், வரலாறு என பலதுறை அறிவுமிக்க கோவை ஞானி எழுதிய பல நூல்களில் இடம் பெற்றுள்ள பல்வேறு கருத்துகளை இந்நூல் தொகுத்து வழங்குகிறது. நூலில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்து எதைப் பற்றியது என்பதை அறிந்து கொள்வதற்காக ஒவ்வொரு கருத்துக்கும் ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மரபுவழியிலான அல்லது ஏற்கெனவே பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல கருத்துகளுடன் ஞானி எவ்வாறு வேறுபடுகின்றார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. எதையும் வித்தியாசமாகப் பார்க்கும் பார்வை ஞானியினுடையது.
மார்க்சியத்திற்குள்ளிருந்து மதக்கூறுகளைக் களைந்துவிட முடியுமா? மதம் உற்பத்தியாவதற்கான சமூகச் சூழல் முற்றாக அழியும்போது மார்க்சியமும் மதக்கூறுகள் அற்றதாகும். மார்க்சியமும் ஒரு மடம் ஆகிவிட முடியும். மடம், புரோகிதர்கள், மூட நம்பிக்கைகள் உருவாவதும், களைவதும் இடையறாத செயல்பாடுகள் என்ற கருத்தையும் ,
இந்திய வரலாற்றில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும், குறிப்பிட்ட காலச்சூழல்களில் மதம் முற்போக்கான பாத்திரம் வகிப்பதையும், வேறு காலச் சூழல்களில் மதம் ஆளும் வர்க்கக் கருவியாக மாறியதையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும். அல்லாமலும் மதத்திற்குள்ளேயும் வர்க்கப் போராட்டம் தொடர்கிறது என்பதையும் புரிந்து கொண்டால் மதம் பற்றிய சரியான அணுகலைக் கொள்ள இயலும் என்ற கருத்தையும் இதற்கு உதாரணங்களாகக் கூறலாம்.
எனினும் எந்தவொரு நூலில் கூறப்பட்டுள்ள கருத்துகளையும் அது எழுதப்பட்ட காலம், நூலின் சமூகப் பின்னணி ஆகியவற்றோடு தொடர்புப்படுத்தித்தான் புரிந்து கொள்ள முடியும். புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறல்லாமல், காலம், இடம், சூழல் தாண்டிய பொன்மொழிகளாக கருத்துகளைப் புரிந்து கொள்வதற்கே இம்மாதிரியான மேற்கோள் தொகுப்பு நூல்கள் பயன்படும். அம்மாதிரியான பயனையே இந்நூலும் தந்திருக்கிறது.”,
நன்றி: தினமணி, 31/12/18.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818