திருமுறைத் திருத்தலங்கள் – பாகம் 6
திருமுறைத் திருத்தலங்கள் – பாகம் 6, சுவாமி சிவராம்ஜி, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக்.128, விலை ரூ.80.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்ஆகிய நால்வர் பெருமக்களோடு அருணகிரிநாதர், சேக்கிழார், காரைக்கால் அம்மையார், நக்கீரர், பரணர் போன்ற பல சிவனடியார்களின் பாடல்களும் 12 திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. இந்நூலில் இவ்வாறு பதிகம் கண்ட பல திருக்கோயில்களின் பெருமைகள், தல வரலாறு, ஆலயச் சிறப்பு, கோயில் அமைப்பு, அமைந்துள்ள ஊர், செல்லும் வழி போன்ற விவரங்கள் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் எமனை உதைத்து அருள் செய்த திருக்கடவூர் மயானம், பேச்சுத்திறன் அளிக்கும் சிவன் உறையும் திருப்பெருவேளூர், சம்பந்தரால் பாடப்பெற்ற திருக்கண்ணபுரம், பட்டினத்தார் பாடிய திருப்பனங்காட்டூர், அட்டவீரட்டத்தலமான திருவிற்குடி, நந்தி தேவரின் திருமணத்திற்கு நெய் வழங்கிய திருநெய்தானம், ஆமணக்குச் செடி தலவிருட்சமாக அமைந்த திருக்கொட்டையூர், சப்த ஸ்தானத் தலங்களுள் ஒன்றான திருப்பழனம், திருவாரூர் பரவை நாச்சியார் திருக்கோயில், கடல்நுரை விநாயகர் வீற்றிருக்கும் திருவலஞ்சுழி, ஐயடிகள் காடவர்கோன் நாயனாரால் பாடப்பெற்ற ஆண்டியூர், சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேஸ்வரர் அருள் செய்யும் கோயில் வெண்ணி என்று சுமார் 25 கோயில்களை உள்ளடக்கிய நூலாக இது விளங்குகிறது.
மேன்மையான சிவதரிசனத்தைப் பெற்ற இன்பத்தை அளிக்கிறது இந்நூல்.
நன்றி: தினமணி, 31/12/18.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818