திருவாசகப் பயணம்
திருவாசகப் பயணம்: முதல் சுற்று (சிவபுராணம், கீர்த்தித் திருஅகவல் விளக்கவுரை)- அ.நாகலிங்கம், திரு.வி.க. பதிப்பகம், பக்.96, விலை ரூ.80.
ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து திருவாசக விளக்கவுரை வகுப்புகள் நடத்தியதன் தொடர்ச்சியாக நூலாசிரியர், திருவாசகத்தில் உள்ள சிவபுராணம், கீர்த்தித் திருவகவல் ஆகிய இரு அகவல்களுக்கு மட்டுமான விளக்கவுரையை முதல் சுற்றாக வெளிக்கொணர்ந்திருக்கிறார்.
சிவபுராணம் 62-ஆவது வரியில் இடம்பெறும் “மாசு அற்ற சோதி” என்பதற்கு, “பெளதிக ஒளிகள் மலர்வதற்கு விறகு, எண்ணெய், திரி, கம்பிகள், கண்ணாடிக் குமிழ் (பல்ப்) முதலிய ஏதேனும் ஒரு மாசு பற்றுக்கோடாக அமைய வேண்டும். ஆனால், இறைவன் ஆகிய சுயம்பிரகாசம் விளங்க மாசு பற்றுக்கோடு ஆவது இல்லை. இதில் புகை முதலிய மாசுகளும் வெளிப்படுவது இல்லை என்பார் சி.சு.கண்ணாயிரம்” என்று பிறிதொருவரின் விளக்கவுரையை சுட்டிக் காட்டியிருப்பதுடன், “களங்கம் இல்லாத ஒளியே” என்று மேற்குறித்த சொற்றொடருக்கு நூலாசிரியர் தெளிவுரை தந்திருக்கிறார்.
திருஞானசம்பந்தர், அப்பர், அருணகிரிநாதர், சேக்கிழார், திருமூலர், போன்றோர் பாடல்களும் தந்து விளக்கப்பட்டிருப்பதுடன், சிவஞானபோதம், உண்மை விளக்கம் முதலிய சைவ சித்தாந்த நூற்பாடல்களும் மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றன.
கீர்த்தித் திருஅகவல் பாடல் வரிகளில் (100-124) மாணிக்கவாசகர் குறிப்பிடும் சிவபெருமானின் பத்து உறுப்புகளுக்கான விளக்கத்தைத் தனித்தனியாக விளக்கியிருப்பதும், சிவபெருமானின் அருளிச் செயல்கள் நடைபெற்ற திருத்தலங்களைக் குறிப்பிட்டிருப்பதும் நூலின் தனிச்சிறப்பு. பாடல்கள் சொல் பிரித்துத் தரப்பட்டுள்ளதுடன் அருஞ்சொற்பொருள், விளக்கவுரை, தெளிவுரையுடன், குறிப்புரை உள்ளதும்; இரு அகவல்களிலும் காணப்படும் செம்பொருள் தனியாக இடம்பெற்றுள்ளதும் நூலின் சிறப்பு.
நன்றி: தினமணி, 6/1/2020
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818