கழுதைப்பாதை
கழுதைப்பாதை, எஸ்.செந்தில்குமார், எழுத்து பிரசுரம் வெளியீடு, விலை: ரூ.375
கழுதைகள் மனிதரோடு இணைந்து வாழப் பழகி கிட்டத்தட்ட 6,000 வருடங்கள் ஆகிவிட்டன. இன்று கழுதைகள் காண்பதற்கரிய விலங்காகிப் போனாலும், தமிழ்நாட்டில் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை பொதி சுமக்கும் விலங்காக, குறிப்பாக மலைப் பகுதிகளில் பயன்பட்டுவந்திருக்கின்றன. 1950-களில் தேனி, கம்பம் சுற்றுவட்டார மலைப் பகுதிகளில் விளையும் காப்பித் தளிர்களை இறக்கவும், தரையிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை மலைக்கு மேலேற்றவும் பயன்படும் கழுதைகள், அவற்றின் மேய்ப்பர்களான கழுதைக்காரர்கள், அந்த மலைகளின் ஆதிகுடிகளான முதுவான்கள், முதுவாச்சிகள், தலைச்சுமைக் கூலிகள், காணிக்காரர்கள், முதலாளிகளான செட்டியார்கள் ஆகியோரின் வெவ்வேறு வாழ்க்கைப் பாதைகளை இணைக்கும் கதையே ‘கழுதைப்பாதை’ நாவல்.
உமையாள் விலாஸ் இட்லிக்கு ஏங்கும் தலைச்சுமைக்காரர்களின் அடிமை வாழ்வு, அவர்களின் ஆண்டை முத்துச்சாமி நாயக்கனின் ஆதிக்கம், கேரளத்திலிருந்து உப்பு விற்க வரும் ராவுத்தரின் மறைவு, செளடையனின் ஆதரவோடு முத்துச்சாமி நாயக்கனை எதிர்த்து கழுதைப் பாதை அமைக்கும் முத்தண்ணன், கழுதைக்காரர்களாக வரும் அவருடைய மகன்களின் பிழைப்பு என்று இவர்களுடைய வாழ்க்கையையும் வரலாற்றையும் ஊடுபாவாகப் பின்னிப் பின்னிக் கதை சொல்கிறார் எஸ்.செந்தில்குமார். தொன்மக் கதைகள், கழுதைக்கான வைத்திய முறைகள், களவு முதலான தொல் சடங்குகள், குலதெய்வங்களின் தோற்ற வரலாறுகள் வழியாகச் சலிப்பின்றி நாவல் நகர்த்திச் செல்லப்படுகிறது.
இதற்கிடையில் செல்வம் – கோமதி, மணிப்பயல் – சரசு, மூவண்ணன் – அங்கம்மா , சுப்பண்ணன் – தங்கம்மா, நாகவள்ளி – எர்ராவூ என்று ஆண், பெண் உறவுகளின் உன்னதங்களும் முரண்களும் நாவல் முழுவதும் தொடர்ந்து பேசப்படுகின்றன. அங்கம்மா கோபத்தில் சாபமிட்டுவிட்டு, எங்கே தன் சாபம் பலித்துவிடுமோ என்று பதறி அழும் காட்சியில், அவளிடம் வெளிப்படும் அன்பு அத்தனை உண்மையாய் இருக்கிறது. நாவல் நெடுக வரும் இதுபோன்ற மனிதர்கள் நாவலை நமக்கு இன்னும் அணுக்கமாக உணரச் செய்கிறார்கள். பல்வேறு காலகட்டங்களில் நிகழும் கதைகள் சொல்லப்பட்டாலும் நாவலில் காலம் குறித்த தகவல்கள் வெளிப்படையாக இல்லை. சுதந்திரப் போராட்டம், நாட்டு விடுதலை, காந்தியின் மறைவு போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவங்கள் ஏற்படுத்திய சலனங்கள்கூட நாவலில் இழையோடவில்லை.
‘குன்ற நாடன் குன்றத்துக் கவாஅன்/ பைஞ்சுனைப் பூத்த பகு வாய்க் குவளையும்’ என்று சங்க இலக்கியங்களில் மலையையும் மலை சார்ந்த வாழ்வையும் ‘குறிஞ்சி’ என்று வகுத்து அவற்றுக்கு முதல், கரு, உரிப் பொருள் என முப்பொருள் விளங்கப் பல பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. குறிஞ்சிக்கொரு புலவராக கபிலர் அறியப்பட்டார். தமிழ்நாட்டின் மேற்கு, வடக்கு எல்லைகள் பெரும்பாலும் மலைகளால் சூழப்பட்டிருந்தாலும் நவீன இலக்கியத்தில் மலை சார்ந்த வாழ்வு குறித்தான பதிவுகள் குறைவாகவே காணக் கிடைக்கின்றன. அந்தக் குறையைப் போக்கும் முக்கியமான வரவென்று இந்த நாவலைக் குறிப்பிடலாம்.
– கார்த்திக் பாலசுப்ரமணியன், ‘நட்சத்திரவாசிகள்’ நாவலாசிரியர்.
நன்றி: தமிழ் இந்து, 25/7/20.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030354_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818