கள்ளத்தோணி

கள்ளத்தோணி, என்.சரவணன், குமரன் புத்தக இல்லம், விலை 275ரூ.

மலையக மக்களின் துயரம் தோய்ந்த வாழ்க்கையைச் சமூக, அரசியல், வரலாற்று நிகழ்வுகளுடன் காலவரிசைப்படுத்தி ‘சரிநிகர்’, ‘காக்கைச் சிறகினிலே’ உள்ளிட்ட இதழ்களில் எழுதியவை இப்போது புத்தக வடிவம் பெற்றிருக்கின்றன. கள்ளத்தோணி என்றாலே உரிய ஆவணங்களின்றி, அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செல்வதல்ல, தோணியிலேயே ஒரு ரகம் அப்படியிருக்கிறது என்பது தொடங்கி வியப்பூட்டும் தகவல்கள் நிறைய உள்ளன.

வடக்கு-கிழக்குத் தமிழர்களும் மலையகத் தமிழர்களும் இரண்டாம்தரக் குடிமக்களாகவும் வேற்றினத்தவராகவும் வாழ்க்கை நடத்தும் நிலை உருவானது. அதில் மலையகத் தமிழர்களைப் பல தரப்பினரும் கிட்டத்தட்ட கைவிட்டுவிட்ட நிலையில், அவர்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறது இந்நூல். ஜவாஹர்லால் நேரு பிரதமராவதற்கு முன்பிருந்தே இலங்கைக்குப் பல முறை சென்றதுடன் மலையகத் தமிழர்கள் பிரச்சினையில் அவருடைய ‘வகிபாகமும்’ பதிவாகியிருக்கிறது.

மலையகத் தொழிலாளர்களை விரட்டிவிட்டு அவர்கள் வசித்த இடங்களில் சிங்களர்களைக் குடியமர்த்த இலங்கை அரசு மேற்கொண்ட செயல்களுக்கு எதிராக 1946-ல் தொடங்கிய வெற்றிலையூர், உருளவள்ளி போராட்டம் உள்ளிட்ட அனைத்தும் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன.

மலையகத்தின் விடிவெள்ளிகள் நடேசய்யர்-மீனாட்சியம்மாள் பற்றிய பதிவு மிகையோ புனைவோ அற்ற செறிவு. கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது ஏன் என்ற விளக்கமும், மலையகத் தமிழர்கள் பற்றிய தகவல்கள் வெளியுலகுக்குத் தெரியாமல் மறைக்கப்படும் அவலமும், இலங்கைத் தமிழரிடையேயும் நிலவும் சாதியக் கண்ணோட்டங்களும் வரலாற்றுப் பதிவுகளாக இருக்கின்றன. ரத்தமும் சதையுமாய் இருக்கும் தமிழர்களைப் பற்றிய இந்நூலைப் படிப்பது நம் புரிதலை மேம்படுத்த உதவும்.

நன்றி: தமிழ் இந்து, 21/11/2020

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030818_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *