தீக்கொன்றை மலரும் பருவம்

தீக்கொன்றை மலரும் பருவம்,  அபுபக்கர் ஆடம் இப்ராஹிம், தமிழில்: லதா அருணாச்சலம், எழுத்து வெளியீடு, விலை: ரூ.499

பழமை தொடரும் சமூகங்கள், பண்பாடுகளின் மைய அச்சாகப் பெண்ணே கருதப்படுகிறாள். பெண்ணின் இயல்பான விழைவுகளையும் தேர்வுகளையும் கட்டுப்படுத்திப் பண்பாட்டைக் காக்கும் சமூகத்தின் சின்ன அலகாகக் குடும்பம் திகழ்கிறது.

அரசியல் ரீதியான பாதுகாப்பின்மையும் மத அடிப்படையிலான வன்முறைகளும் அன்றாடமாகவுள்ள வடக்கு நைஜீரியாவைப் பின்னணியாகக் கொண்டு அபுபக்கர் ஆடம் இப்ராஹிம் எழுதிய நாவல் இது. 55 வயது விதவையான ஹஜியா பிந்தா ஜூபைரு, சமூகமும் குடும்பமும் விதிக்கும் வரம்புகளை மீறி தனது விருப்பங்களைச் செயல்படுத்த நினைக்கும்போது எதிர்கொள்ளும் பயங்கரங்களைப் பேசுகிறது.

நாவலின் கதைசொல்லல் சம்பிரதாய மானதுதான். நாவலாசிரியர் எதையும் சொல்லாமல் விடவில்லை என்பதால் சற்று இழுவை என்றும் உணரவைப்பது. ஆனால், நாவலின் நிலமும் அரசியலும் தமிழுக்குப் புதியவை. சான்சிரோ பகுதியில் அரசியலர்களின் ஆதரவுடன் போதைப் பொருள் வணிகம், திருட்டு, கடத்தலில் ஈடுபட்டு, குட்டி தாதாவான இருபது வயது ரெஸாவின் உலகமும், இருள் சூழ்ந்த வீட்டில் கட்டுப்பட்டித்தனமாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் பிந்தாவுக்கும் இடையே உறவு மலர்கிறது.

அந்த உறவு குடும்பம், அரசியல், மதம் என அத்தனை தளங்களிலும் ஏற்படுத்தும் நிலைகுலைவைச் சொல்லும் கதை என்பதால் புதியதாகிறது. நாவலில் வரும் பெண்களின் கனவுகள், ஆசைகள், புராணிகங்கள், பெருமூச்சுகள், காமதாபங்களின் நறுமண உலகில் இயல்பாகப் புழங்குகிறார் நாவலாசிரியர். அதுதான் இதன் தனித்துவங்களில் ஒன்று.

தொடக்கத்தில், மதக் கலவரத்தில் கணவனையும், காவல் துறையினரின் தாக்குதலில் மூத்த மகனையும் பறிகொடுத்த பிந்தாவின் தனிமை வாழ்வு சித்தரிக்கப்படுகிறது. அவளுடன் அவளது தங்கை மகள் பைசாவும் பேத்தி உம்மியும் இருக்கிறார்கள். பைசாவை அவள் சிறுவயதில் பார்த்த பயங்கர மரணம் உளவியல்ரீதியாகத் துரத்திக்கொண்டிருக்கிறது. பிந்தாவின் பிரியத்துக்குரியவனும் மூத்தவனுமாகிய யாரூவின் மீதுகூட மத, சமூகக் கட்டுப்பாடு காரணமாக பிந்தாவால் வெளிப்படையான பிரியம் காட்ட முடிந்திருக்கவில்லை.

அவன் சடலமாக வீடு வந்தபோது மட்டுமே அவனைப் பெயர் சொல்லி கூக்குரலிட்டு அழ முடிந்தது. ஆசிரியர் பணிக்குப் படித்தவள் பிந்தா. அவளுக்குப் பிடித்த நாவலாக ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும்’ உள்ளது. அவள் தனது 55-வது வயதில் ஆசை எனும் படகில் ஏறிக் காதலைப் பிடிக்க முயன்ற வேட்டை அந்த நாவலிலிருந்து அவளிடம் இறங்கியிருக்கலாம். மதம், பண்பாடு, குடும்பம், செல்வாக்கு எல்லாவற்றோடும் தான் கட்டப்பட்டுள்ள மூச்சுமுட்டலை பிந்தா தன் வீட்டுக்கு மதில்சுவர் உயர்த்தப்படும்போது உணரத் தொடங்குகிறாள்.

காதலன் ரெஸா, இரண்டாவது மகன் மூன்க்கைலா இரண்டு பேருக்கும் இடையில் இரண்டு தரப்புகளுக்கு இடையில் ஒரு தரப்பைத் தேர்ந்துகொள்ள முடியாதவள் அவள். இரண்டு பேரும் பிந்தாவுக்கு அத்தியாவசியமானவர்கள். காதலன், மகன் இரண்டு பேரின் மரணமும் அவளை மேலும் துயர்நிலைக்கே தள்ளுகிறது.

தமிழ்ப் பின்னணியோடு அடையாளம் காணக்கூடிய இந்த நாவல் வாசிப்பை மேலும் நெருக்கமான அனுபவமாக மொழிபெயர்ப்பாளர் லதா அருணாசலம் மாற்றியிருக்கிறார். குடும்ப கௌரவம், காதல் இரண்டுக்கும் இடையே மிச்சமிருந்த இன்னொரு மகனையும் காதலனையும் இழந்து அநாதையாகத் தன் வீட்டின் வாசலில் நின்று ஓலமிட்டு நிற்கும்போது பிந்தா ஒரு பிரகிருதியாகிவிடுகிறாள். பண்பாடுகளும் ஒழுக்கத்தின் பெயரால் கட்டப்பட்ட சமய நெறிகளும் தொடர்ந்து யாரைப் பலிகேட்டுக்கொண்டிருக்கின்றன?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நன்றி: தமிழ் இந்து, 7/3/20

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000029638_

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *