அப்துல்கலாம் நினைவுகளுக்கு மரணமில்லை
அப்துல்கலாம் நினைவுகளுக்கு மரணமில்லை, ய.சு. ராஜன், ஆ.ப.ஜெ.மு. நசீமா மரைக்காயர், பதிப்பாசிரியர் – சிற்பி பாலசுப்பிரமணியம்; அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழி பெயர்ப்பு மையம், பக்.724, விலை ரூ.600.
விண்வெளித்துறையில் அப்துல்கலாமுடன் பயணித்த, அவரது நெருங்கிய நண்பரான விண்வெளி விஞ்ஞானி யக்ஞசுவாமி சுந்தர்ராஜன் என்கிற ய.சு. ராஜன் மற்றும் அப்துல்கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயரும் இணைந்து அப்துல்கலாமைப் பற்றிய பலரும் அறியாத தகவல்களின் களஞ்சியத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
சாதாரண குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் உயர்ந்ததற்கான பின்னணியை இந்நூல் விளக்குகிறது. கலாமின் முன்னோர்கள் குறித்தும் அவர்களுடைய வாழ்வியல் நெறிமுறைகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. அவருடைய மாணவப்பருவத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள், கலாமின் விருப்பமான உணவு, விருப்பமான இசை, இயற்கையை நேசிக்கும் அவர் பண்பு என கலாம் என்ற மனிதரின் விருப்பங்கள், ஆசைகள், பழக்க, வழக்கங்கள் எல்லாவற்றையும் இந்நூல் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. திருக்குர் ஆன், திருக்குறள், பாரதியார் பாடல்கள் ஆகியவற்றைத் தனது வாழ்க்கைக்கான வழிகாட்டிகளாக அப்துல்கலாம் மாற்றிக் கொண்டார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
கலாமை சிறந்த நிர்வாகியாகவும், நிபுணத்துவம்மிக்கவராகவும், விண்வெளி விஞ்ஞானியாகவும் எது விளங்கச் செய்தது என்பதை ய.சு. ராஜன் விளக்கியிருக்கிறார். அப்துல்கலாம் என்கிற மாமனிதரின் தூய்மையும், வாய்மையும் நிரம்பிய வாழ்க்கைப் பதிவான இந்நூல், அவரை மானசீகமாகப் பின்தொடர்பவர்களுக்கு சிறந்த வரப்பிரசாதம்.
நன்றி: தினமணி, 29/3/2021.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818