நாடகமும் தமிழிசையும்
நாடகமும் தமிழிசையும், டி.கே.எஸ். கலைவாணன்; வானதி பதிப்பகம், பக். 176, விலை ரூ. 150;
தமிழ் இசையை பாமர மக்களிடமும் பரப்பிய பெருமை தமிழ் நாடகக் கலைஞர்களுக்கு உண்டு’, “நாடகமும் தமிழிசையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது’ என்பதைப் பல்வேறு ஆதாரங்களுடன் நிறுவிக்காட்டும் ஆய்வு நூல்.
தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் தமிழிசைப் பாடல்கள்’, “நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்தனார்’, “நாடகம் வளர்த்த தமிழிசை’, “நாடகம் வளர்த்த நால்வர்’, “நூற்றாண்டு கண்ட நடிப்பிசை மாமணிகள்’, “திரையிசையில் தமிழிசையின் பங்களிப்பு’, “சுதந்திரப் போராட்டத்தில் தமிழிசையின் பங்கு’, “காலம் மாற்றிய நாடகமேடை’, “காலத்தை வென்றவன் தமிழன்’, “மாணவர் உலகில் நாடகம்’, “வாழ்க்கையில் கலை’ உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உருவான கட்டுரைகளில் எண்ணற்ற தகவல்களும், சம்பவங்களும் வாசகர்களுக்கு விருந்தாக விளங்குகின்றன.
சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் தம் காலத்தில் “பரத சேனாபதீயம்’, “மதிவாணர் நாடகத்தமிழ் நூல்’ ஆகிய நூல்கள் இருந்தன என்று குறிப்பிட்டிருக்கிறார் (பக்கம் 94). சோழ மன்னர் ராஜராஜ சோழனின் வரலாறு “ராஜராஜ விஜயம்’ என்னும் பெயரில் நாடகமாக அக்காலத்தில் நடத்தப்பட்டிருக்கிறது. கோயில் மண்டபங்களில் தீப்பந்த வெளிச்சத்தில் இந்த நாடகங்கள் நடிக்கப்பட்டன என்பது போன்ற பல வரலாற்றுச் சான்றுகளை இந்நூலின் மூலம் அறியமுடிகிறது.
அவ்வை டி. கே. சண்முகம் சகோதரர்களின் தாய் தந்தையைப் பற்றிய குறிப்புகள் அனைத்தும் அரிய தகவல்கள். டி.கே.எஸ். சகோதரர்களின் தந்தை கந்தசாமி பிள்ளை தன் சிறு வயதில் நாடகக் கம்பெனியில் சேர்ந்ததும், ஸ்திரி பார்ட் வேடங்களில் நடித்து புகழ்பெற்று வளர்ந்ததும், பின்னர் அதேபோன்று தனது பிள்ளைகள் நால்வரையும் இளம் வயதிலேயே “பாய்ஸ் கம்பெனி’யில் சேர்த்து விட்டு, அவர்களின் பாதுகாப்புக்காக பின்பாட்டுப் பாடும் பணியை மேற்கொண்டதும் நெகிழ்ச்சியான சம்பவங்கள். சென்னை தமிழிசைச் சங்கத்தில் நடைபெற்ற பண்ணாராய்ச்சி கட்டுரைகளும், “திருக்குறளில் நாடகத்தமிழ்’ என்ற கட்டுரையும் இந்நூலின் சிறப்பம்சங்கள். ஆய்வு மாணவர்கள் படித்து பாதுகாக்க வேண்டிய நூல்களில் ஒன்று.
நன்றி:தினமணி, 8/3/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031265_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818