தமிழ் நூல் தொகுப்புக் களஞ்சியம்


தமிழ் நூல் தொகுப்புக் களஞ்சியம்,  முனைவர் சுந்தர சண்முகனார், மணிவாசகர் பதிப்பகம், பக்.800, விலை ரூ.650.  

மணிவாசகர் பதிப்பகத்தின் வைரவிழா வெளியீடாக இந்நூல் வெளிவந்திருப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. ஒரு புறம் இது மகிழ்ச்சியான செய்தி என்றால், இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் உண்டு. அதற்குக் கீழ்க்காணும் பதிவு துணைசெய்யும்.

பழைய புத்தகக் கடையில் கண்டெடுத்த அற்புதமான புத்தகங்களில் ஒன்று "தமிழ்நூல் தொகுப்புக் களஞ்சியம். தமிழ் இலக்கியம் படிக்கும், இலக்கியத்தில் லயிக்கும் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய, அவர்கள் படிக்க வேண்டிய புத்தகம். தமிழ் அகராதித் துறைப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற ஆராய்ச்சி அறிஞர் முனைவர் சுந்தர சண்முகனாரால் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட புத்தகம் அது.

உதிரிப்பூக்களை மாலையாகத் தொடுப்பதுபோன்ற பணி, நூல்களை அவற்றின் அளவு, பொருள், பயன் ஆகியவற்றின் அடிப்படையில் தொகுத்து வழங்குவது.

சங்கப் பாடல்களை அகம், புறம் என்று பகுத்து, திணை பற்றியும், அடியளவு பற்றியும் தொகுத்த சான்றோரின் திறம் வியக்க வைக்கிறது. நாலாயிர திவ்யப் பிரபந்தமும், சைவத் திருமுறைகளும், தவத்திரு ஊரன் அடிகள் வரிசை எண்ணிட்டுத் தொகுத்து வகைப்படுத்திய திருவருட்பாவும் தலைசிறந்த தொகுப்புகள்.

2,500 ஆண்டுகளாகத் தமிழில் எழுந்த அனைத்துத் தொகுப்புகளையும் தமிழ்நூல் தொகுப்புக் களஞ்சியம் அளவிடுகிறது, மதிப்பிடுகிறது, திறனாய்வு செய்கிறது. தொகுப்பியல் வரலாறு, தொகுப்புகளில் தோற்றமும் வளர்ச்சியும், நூல்கள் தொகுக்கப்பட்ட முறையும், தொகைகளின் வகையும் என்று ஒன்றுவிடாமல் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது, ஆராயப்பட்டிருக்கிறது.

தமிழில் மட்டுமில்லாமல், கிரேக்கம், லத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சம்ஸ்கிருதம், எபிரேயம், சீனம் ஆகிய மொழிகளில் உள்ள தொகை நூல்கள் குறித்துப் பரந்த பார்வையைப் பதிவிட்டிருப்பது தனிச்சிறப்பு. தொல்காப்பியத்துக்கு முன் தலைச்சங்க காலத்திலிருந்தே தொகை நூல்கள் இருந்ததாகப் பதிவு செய்கிறார் ஆசிரியர். இடைச்சங்க காலம், பக்தி நெறி ஓங்கி இருந்த இடைக்காலம், பிற்காலம் என்று தனித்தனியாகப் பட்டியலிட்டு, நிகழ்காலம் வரையிலான தொகுப்பு நூல்கள் குறித்த செய்திகளை மாலை தொடுத்திருக்கிறார் பெரும்புலவர் முனைவர் சுந்தர சண்முகனார்.

தமிழில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொகை நூல்கள் வெளிவந்திருக்கின்றன என்று கூறும் ஆசிரியர், அந்த நூல்களைப் பற்றிய குறிப்புகளையும் பல நூலகங்களுக்குச் சென்று திரட்டி இருக்கிறார்.

தனியொருவராக அவர் எடுத்த முயற்சியின் பயன்தான் "தமிழ்நூல் தொகுப்புக் களஞ்சியம் இவ்வாறு இந்நூல் பற்றி தமிழ்மணியின் இந்த வாரம் பகுதியில் கலாரசிகன் (ஆசிரியர்) சிலாகித்து, விமர்சித்து எழுதியதோடல்லாமல், முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் மணிவாசகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த அற்புதமான புத்தகம் ஏன் இரண்டாம் பதிப்புக் காணவில்லை என்பதுதான் எனது வியப்பு. உடனடியாக எண்மப் பதிவேற்றம் செய்யப்பட்டு, இணையத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் இது!என்று வேண்டுகோளும் விடுத்ததைத் தொடர்ந்து உடனடியாக இந்நூலைப் மறுபதிப்பு செய்திருக்கிறார்கள் என்பதுதான் இரண்டாவது மகிழ்ச்சியான செய்தி! படித்துப் பயன் பெறுவோம்!

நன்றி:தினமணி, 8/3/21

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031264_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *