ஊஹானில் தொடங்கிய ஊரடங்கு
ஊஹானில் தொடங்கிய ஊரடங்கு, திண்டுக்கல் ஜம்பு, அழகு பதிப்பகம், பக்.180, விலைரூ.180;
கரோனா தீநுண்மியின் தோற்றம், பரவுதல், பாதிப்பு குறித்த நூலாசிரியருடைய கருத்துகள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த பிரபலங்கள் குறித்த தகவல்களும் உள்ளன.
பொதுவாகவே சீன அரசைப் பொறுத்தவரை மனித உயிர்கள் புல்லுக்குச் சமம். இதில் அந்நாட்டினுடைய குடிமக்களும் அடக்கம் என்று சீனாவைப் பற்றி கூறும் நூலாசிரியர், ஊஹான் ஆய்வகத்தில் உணவு போட்டு வளர்த்து, பின் உலகம் முழுவதும் கலாட்டா பண்ணச் சொல்லி சீனாக்காரன் ஏவிவிட்ட கூட்டமான்னு சீனாக்காரனுக்கும் அந்த ஆண்டவனுக்கும்தான் தெரியும். ஆனால் உலகம் பற்றி எரிவதில் சீனாவுக்கு அயோக்கியத்தனமான ஒரு பங்கு நிச்சயமாக இருக்கிறது என்று கரோனா வைரஸின் தோற்றம் பற்றி கூறுகிறார்.
உயிரியல் யுத்தம் என்ற பேச்சுகள் வெகுநாளாகவே நடந்து வருகின்றன. ஆய்வகத்தில் சீனாவே வைரஸை உருவாக்கி வெளி உலகத்துக்கு ஏன் பரப்பியிருக்கக் கூடாது? என்ற கேட்கும் நூலாசிரியர், சீனாவில் கரோனா பாதிப்பு ஏன் ஏற்பட்டது என்பதையும் விளக்குகிறார்.
முதலாவது காரணம், வெளி உலகத்துக்கு வைரஸைப் பரப்பிவிடும் முன் தன் நாட்டிலேயே இவ்வாறு செய்தால் மற்ற உலக நாடுகளுக்கு பின்னால் சந்தேகம் வராது. இரண்டாவது காரணம், சீனாவுக்கு வெளியே வைரஸ் எப்படி தன் வேலையைக் காட்டும், எதிர்பார்த்த விளைவுகளை உண்டாக்குகிறதா என்று தன் நாட்டுக்குள்ளேயே வைரஸைப் பரப்பி செய்யப்படும் ஆராய்ச்சி என்கிறார்.
உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு உதவும் வகையில் செயல்பட்டது என்கிற குற்றச்சாட்டையும் நூலாசிரியர் முன் வைக்கிறார். என்றாலும், கொரோனா 19 சீனாவில் மனிதனால் உண்டாக்கப்பட்டது என்பதை நிரூபிப்பதற்கான போதுமான ஆதாரம் இல்லை. ஆதாரங்கள் இருந்திருந்தாலும் இவ்வளவு நாட்கள் சீனம் அவற்றை அழிக்காமல் விட்டிருக்காதுஎன்கிற கருத்தும் இந்நூலில் கூறப்பட்டு இருக்கிறது.
நன்றி: தினமணி, 26/7/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818