இந்திய இலக்கியத்திற்கு கு.சின்னப்ப பாரதியின் பங்களிப்பு
இந்திய இலக்கியத்திற்கு கு.சின்னப்ப பாரதியின் பங்களிப்பு(கட்டுரைத் தொகுப்பு) , பாரதி புத்தகாலயம், பக்.224, விலை ரூ.150.
தமிழ் இலக்கிய உலகுக்கு இடதுசாரி இயக்கம் வழங்கிய மிகப் பெரிய கொடை கு. சின்னப்ப பாரதி. கவிஞராகவும், புனைவுப் படைப்பாளியாகவும் இவர் எழுதியிருக்கும் நூல்கள் அனைத்துமே சர்வதேச அளவில் கொண்டாடப்படுகின்றன. தமிழகத்தில் அல்லாமல் கேரளத்திலோ, மேற்கு வங்கத்திலோ கு. சின்னப்ப பாரதி பிறந்திருந்தால், அவருக்குத் தரப்பட்டிருக்கும் அங்கீகாரமும், கெளரவமும் பன்மடங்கு அதிகம். கொண்டாடப்படும் எழுத்தாளராக இருந்திருப்பார்.
கு.சி.பா. என்று பரவலாக அறியப்படும் கு. சின்னப்ப பாரதி அளவிற்கு, வேற்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட இன்றைய தமிழ் எழுத்தாளர் இன்னொருவர் இருக்க வழியில்லை. இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், ரஷியன், ஜெர்மன் என்று அவரது படைப்புகளை மொழியாக்கம் செய்வதில் பல வெளிநாட்டு ஆய்வாளர்கள் முனைப்புக் காட்டுவதில் இருந்து அவரது எழுத்தின் வீச்சும், அதன் ஆளுமையும் வீரியமும் விளங்கும்.
கு. சின்னப்ப பாரதிக்கு நிகராகத் தமிழில் எந்த எழுத்தாளரையும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாது. ரஷிய மொழியின் மிகச் சிறந்த எழுத்தாளரும், நோபல் விருது பெற்றவருமான மைக்கேல் ஷோலக்கோவ் போன்ற சர்வதேச முக்கியத்துவம் மிக்க படைப்பாளிக்கு நிகரானவர் நமது கு.சி.பா. என்று காலந்தோறும் என்கிற தனது கட்டுரையில் பதிவு செய்கிறார் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி.
எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதி குறித்து 46 முக்கியமான இலக்கிய ஆய்வாளர்கள் எழுதிய கட்டுரைகள் இந்திய இலக்கியத்திற்கு கு. சின்னப்ப பாரதியின் பங்களிப்பு என்கிற தலைப்பில் புத்தக வடிவம் பெற்றிருக்கின்றன. மக்கள் மீது அக்கறை கொண்ட எழுத்துச் சிற்பி என்று பிரபல ஹிந்தி எழுத்தாளர் சித்ரா முத்கலும், கு. சின்னப்ப பாரதியின் நாவல்களும் எதார்த்தப் போக்கும் என்று ஹிந்தி கவிஞர் சஞ்சய் செளஹானும் பாராட்டுகிறார்கள் என்றால் எந்த அளவுக்கு அவரது எழுத்துகள் தமிழக எல்லை கடந்து தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதை உணரலாம்.
தொ.மு.சி. ரகுநாதனை முற்போக்கு இலக்கியத்தின் மூலவர் என்றும், கு. சின்னப்ப பாரதியை உற்சவர் என்றும் போற்றும் எழுத்தாளர் சு. சமுத்திரம், அவரைத் தனது படைப்பிலக்கிய முன்னோடி என்று வர்ணிக்கிறார். கு.சி.பா.வின் தாகம் நாவலையும், பெர்ல்.எஸ்.பக் எழுதிய நல்ல பூமி நாவலையும் ஒப்பாய்வு செய்கிறார் மார்க்சிய ஆய்வாளர் பேராசிரியர் எஸ். தோத்தாத்ரி.
நன்றி: தினமணி, 26/7/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818