நாழிக் கூழும்… மொளகாயும்
நாழிக் கூழும்… மொளகாயும், சி.அன்னக்கொடி, கோதை பதிப்பகம், பக்.140, விலை ரூ.140.
முழுக்க முழுக்க வட்டாரப் பேச்சு வழக்கிலேயே அமைந்துள்ள 23 சிறுகதைகளின் தொகுப்பு. நாகரிக வளர்ச்சியில்பேச்சு வழக்கிலிருந்து மறைந்து போன பல வார்த்தைகள் சிறுகதைகளில் கையாளப்பட்டுள்ளன.
கிராமத்து வாழ்வியல், அதிலும் எளிய பாமர மக்களின் வாழ்வியல் என்றாலே சோகம் மட்டுமே நிரம்பியிருக்கும் என்ற வழக்கமான பாணி இத்தொகுப்பில் உள்ள கதைகளில் இல்லை. தொகுப்பு முழுக்க வரும் கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணத்துடன் அமைந்து நம்மை வசியப்படுத்துகின்றனர். கிராமியக் கதைகள் என்பதால் சொலவடைகளுக்குப் பஞ்சமில்லை.
தன்னுடைய கதை மாந்தர்கள் அனைவருமே தன்னுடைய சொந்த ஊரான சுரைக்காப்பட்டி வாழ் எளிய மனிதர்கள்தான் என்கிறார் நூலாசிரியர்.கரிசல் பூமியில் வசிக்கும் மனிதர்களின் அன்பு, உயிர்நேயம், உழைப்பு, அறியாமை, அடிமைத்தனம், கோபம், நகைச்சுவை என மனிதர்களின் பல்வேறு குணங்களின் கலவையை பாத்திரங்களில் உயிர்ப்பித்துள்ளது பாராட்டத்தக்கது.
இந்த அசலை எப்ப கொடுக்க, வட்டியை எப்ப கொடுக்க, கடனுக்கு அப்பன் ஒரு காட்டை வித்தாரு. நான் இருக்கிற இந்தப் புஞ்சையையும் வெலை சொல்ல வேண்டி வந்திருமோன்னு பொலம்பிக்கிட்டே வந்தாரு. அப்ப வெயிலடிச்ச போதும் எங்கிருந்தோ ஒரு தூத்தல் பெரியசாமியின் விரலில் பட்டு தெறிச்சுது – என்று முடிகிறது தொகுப்பில் இடம் பெற்றுள்ள தூத்தல்சிறுகதை. மனதில் பதிகின்ற இதுபோன்ற பல சிறுகதைகள் தொகுப்பில் இடம் பெற்றிருப்பது தனிச்சிறப்பு.
நன்றி: தினமணி, 12/7/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818