நானும் என் பூனைக்குட்டிகளும்
நானும் என் பூனைக்குட்டிகளும், தரணி ராசேந்திரன், எழுத்து பிரசுரம், விலை: ரூ.150.
தரணி ராசேந்திரனின் முதல் நாவலான ‘நானும் என் பூனைக்குட்டிகளும்’ எழுப்பும் ஆதாரக் கேள்வி இதுதான்: பிராணிகள் மீதான உண்மையான அக்கறை எது? பிராணிகளை ஆசையாக வீட்டில் வளர்ப்பவர்களும், பிராணிகளின் நலனுக்காகச் செயல்படும் ப்ளூ கிராஸ் போன்ற அமைப்புகளும், அரசுத் துறைகளும் தங்களை மறுபரிசீலித்துக்கொள்ள வழிகாட்டுகிறார்கள் நாவலின் நாயகன் பாலாவும் அவனுடைய அம்மாவும்.
விலங்குகள் மீதான அக்கறை எல்லைக்குள் இருக்கும் இந்தச் சிறுபான்மையினரோடும், பிராணிகளை ஒரு பொருட்டாகவே தங்கள் அன்றாடத்தில் கொண்டிராத பெரும்பான்மையினரோடும் இருவேறு தளங்களில் இந்நாவல் உரையாட விரும்புகிறது.
இலக்கியத்தின் ஆதார குணங்களில் ஒன்று அது வாசகரின் பார்வைக் கோணத்தை மாற்ற வேண்டும் என்பது. வெவ்வேறு முரண்பாடுகளுக்கு இடையேயான விவாதங்களை நிகழ்த்துவதன் வழியாக இதைச் சாதிப்பது ஒரு வழி. இன்னொரு வழி என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட நிகழ்வு தொடர்பான பொதுவான எண்ணங்களுக்கு நேரெதிரான இன்னொரு யதார்த்தத்தைச் சொல்வதன் வழியாகச் சாதிப்பது. இந்த நாவல் இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறது.
பாலாவும் அவனுடைய அம்மாவும் பூனைகள் மீதும், நாய்கள் மீதும் வாஞ்சையோடு இருக்கிறார்கள். இவையெல்லாம் அவர்கள் வீட்டில் வளர்க்கும் பிராணிகள் அல்ல; தெருக்களில் திரிபவை. நாவலின் தொடக்கத்தில், ஒரு பூனையையும் அதன் குட்டிகளையும் கவனித்துக்கொள்ள ஆரம்பிக்கும் இவர்கள், பின்னாளில் மாதம் 60 கிலோ அளவில் சோறாக்கி தெருநாய்களுக்கு உணவூட்டுகிறார்கள். பார்க்கவே சகிக்காத காயங்களைக் குணப்படுத்த பிரயத்தனம் எடுக்கிறார்கள். தடுப்பூசிகளும் மருந்துகளும் கொடுத்துப் பேணிப் பாதுகாக்கிறார்கள். பூனைகளும் நாய்களும் தங்களை முழுமையாக இவர்களிடம் ஒப்படைக்கின்றன.
தம் வீட்டில் வளர்க்கும் விலங்குகளின் மீதான அன்புகூட ஒருவகையில் சுயநலமானது என்பதையும், அமைப்புகளும் அரசுகளும் காட்டும் அக்கறையில் கடமைக்கு அப்பாற்பட்டது அரிது என்பதையும் இந்நாவல் கோடிட்டுக் காட்டுகிறது. கொஞ்சம் பிசகியிருந்தாலும், சமூகத்துக்குப் பாடம் எடுக்கும் நீதிக் கதையாக ஆகியிருக்கும். அப்படியான சமிக்ஞைகள் ஆங்காங்கே தென்பட்டாலும்கூட உணர்வுபூர்வமான தருணங்களால் எல்லாக் குறைகளையும் மறக்கடிக்கிறார் தரணி. பின்னட்டைக் குறிப்பில் சாரு நிவேதிதா சொல்வதுபோல, இந்நாவல் பல இடங்களில் கண் கலங்க வைக்கிறது; பாதிப்பை உருவாக்குகிறது. நாய்களும் பூனைகளும் எவ்வளவோ தமிழ்ப் புனைவுகளில் வலம்வந்திருக்கின்றன என்றாலும் இந்நாவல் காட்டும் உலகம் தனித்துவமானது!
நன்றி: தமிழ் இந்து, 19/6/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031118_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818