1232 கி.மீ.
1232 கி.மீ., வினோத் காப்ரி; தமிழில்: நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக்.282; விலை ரூ.350.
கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்கும் பொருட்டு மார்ச் 24, 2020 இல் இந்தியா முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சொந்த ஊரிலிருந்து புலம்பெயர்ந்து பிற மாநிலங்களில் வேலை பார்த்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து பெரும் அவதிக்குள்ளாகினர். அவர்களில் பெரும்பாலோர் நடந்தே தத்தமது சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். அப்படி உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்திலிருந்து 1232 கி.மீ. தொலைவில் உள்ள பிகார் மாநிலம் சகர்ஸு மாவட்டத்திலுள்ள தங்களது சொந்த ஊருக்கு ரிதேஷ், ராம் பாபு, ஆஷீஷ், கிருஷ்ணா, முகேஷ், சந்தீப், சோனு ஆகிய ஏழு தொழிலாளர்கள் சைக்கிள் மூலம் சென்றடைகின்றனர். வழி நெடுகிலும் அவர்களுக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை இந்நூல் பதிவு செய்துள்ளது.
காவல் துறையினரின் கெடுபிடி, வெயில், பசி, களைப்பு, சைக்கிள் பஞ்சர், உடல்நலக் குறைவு என கடுமையான சூழ்நிலைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த ஏழு தொழிலாளர்களுக்கு காவல் துறை, மாவட்ட நிர்வாகங்கள் என அதிகார வர்க்கத்தினர் பயத்தை ஏற்படுத்தினர். ஆங்காங்கே போக்குவரத்து உதவி, உணவு, உறைவிடம் தந்து உபசரித்து எளிய மனிதர்கள் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டினர்.
வேதனை மிகுந்த 7 நாள்கள் பயணத்துக்குப் பிறகு, மிகுந்த நம்பிக்கையுடன் சொந்த மாநிலத்துக்கு திரும்பிய அவர்கள் சுகாதாரமற்ற உறைவிடத்தில் தங்கவைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகே உணவு அவர்களுக்குத் தரப்படுகிறது. பொதுமுடக்கத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு அத்தொழிலாளர்கள் மீண்டும் காசியாபாத்துக்கு திரும்பும் வரையிலான நிகழ்வுகளை இந்தநூல் விவரிக்கிறது.
நன்றி: தினமணி, 20/12/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818