அகநானூற்றின் அமைப்பும் சிறப்பும்
அகநானூற்றின் அமைப்பும் சிறப்பும், சோ.ந. கந்தசாமி, மணிவாசகர் பதிப்பகம், பக்.208, விலை ரூ.175.
அகநானூறை எழுவகை நோக்கில் ஆராயும் முயற்சியாக இந்நூல் அமைந்துள்ளது. முதல் இயலில் அகநானூறு பற்றிய அடிப்படைத் தகவல்கள் உள்ளன. இரண்டாவது இயல், பாடிய புலவர்களின் பாடல்களை தொகை வகை செய்துள்ளது. தமக்குரிய ஊரின் பெயரையும், பெற்றோரின் பெயரையும் முன்னொட்டாகக் கொண்ட புலவர்கள், பாடியோர் வரிசையில் அரசரும், பெண்பாற் புலவர்களும் என இவ்வியல் அமைந்துள்ளது.
“அகநானூற்று அக மாந்தர்’ எனும் மூன்றாவது இயலில் முதன்மை மாந்தர்கள், துணை மாந்தர்கள் ஆகியோர் நாடகப்பாங்கில் உரையாடுவது போல அமைந்த களங்களும், சூழல்களும் எடுத்துரைக்கப்படுகின்றன. நான்காம் இயல் அகநானூற்றின் இலக்கியச் சிறப்பினை விளக்குகிறது. அக மாந்தர்கள் தம்முடைய எண்ணங்களை, கருத்துகளை வெளிப்படுத்தும் கருவியாக உள்ளுறை, இறைச்சி போன்ற உத்தியை எவ்வாறு நாகரிகமாகக் கையாளுகின்றனர் என்பதை மிக அழகாக நூலாசிரியர் எடுத்துரைக்கிறார்.
தொல்காப்பியர் காலத்திற்குப் பின் தோன்றிய புதிய இலக்கணக் கூறுகள் பலவும் அகநானூற்றுப் பாடல்களில் உள்ளன என்பதை ஆய்ந்து, அவற்றை ஐந்தாவது இயலான “அகநானூற்றில் புதிய இலக்கணக் கூறுகள்’ பகுதியில் தெளிவுபடுத்துகிறார். அகநானூற்றில் உள்ள வரலாற்றுக் குறிப்புகளை ஆறாவது இயலும், அகநானூற்றின் பதிப்பு மற்றும் உரை வரலாற்றை ஏழாவது இயலும் தெளிவுபடுத்துகிறது.
அகநானூறு குறித்து எளிமையாகவும், விரிவாகவும், முழுமையாகவும் அறிந்துகொள்ள இந்நூல் பெரிதும் பயன்படும்.
நன்றி: தினமணி, 31/1/22.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818