அன்புள்ள ஏவாளுக்கு

அன்புள்ள ஏவாளுக்கு, ஆலிஸ் வாக்கர், தமிழில் ஷஹிதா, எதிர் வெளியீடு, விலை 350ரூ.

எண்பதுகளில் இங்கே விளிம்புநிலை மனிதர்களும் அவர்களது வாழ்க்கையும் இலக்கியமாகி பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தத் தொடங்கிய அதே காலகட்டத்தில்தான் ஆப்ரிக்க-அமெரிக்கர்களின் கதையை ‘தி கலர் பர்ப்பிள்’ (தமிழ் மொழிபெயர்ப்பின் தலைப்பு: ‘அன்புள்ள ஏவாளுக்கு’) என்ற பெயரில் நாவலாக்குகிறார் ஆலிஸ் வாக்கர். அந்நாவல் வெளியாகிய அடுத்த ஆண்டே ஆலிஸ் வாக்கருக்கு ‘புலிட்சர் விருது’ கிடைக்கிறது. ஆலிஸ் வாக்கர்தான் புலிட்சர் விருதுபெற்ற முதல் கறுப்பினப் பெண். நாவல் வெளியாகி அடுத்த மூன்று ஆண்டுகளில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் இயக்கத்தில் திரைப்படமாகிறது. சர்வதேச அளவில் கவனம் பெறுகிறார் ஆலிஸ். இந்நாவல் ஆலிஸுக்கு மிகப் பெரும் புகழைத் தேடித்தந்த அதேவேளையில் பல்வேறு தரப்புகளிலிருந்து கடுமையான எதிர்ப்புகளையும் பெற்றுத் தருகிறது.

ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையைப் பேசும் ஆலிஸ் வாக்கரின் இந்நாவல், மற்ற இலக்கியங்களிலிருந்து சில பிரத்யேகமான அம்சங்களில் மாறுபட்டது. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி சித்தரிப்பதன் மூலமாக சமூக யதார்த்தத்தை முன்வைப்பதாகவும், ஒடுக்குபவர்களின் மனநிலையை எடுத்துரைப்பதாகவும், ஒடுக்குபவர்கள் குறித்து ஏதும் பேசாமல் ஒதுக்கப்பட்டவர்களின் துயரார்ந்த வாழ்க்கையை மட்டும் பேசுவதன் வாயிலாக இன்னொரு பக்கத்தையும் சொல்வதாகவும் விளிம்புநிலை மாந்தர்களின் வாழ்க்கைகள் இலக்கியங்களாகின. இந்தப் படைப்புகளெல்லாம் மிகத் தீவிரமாக, சோக பாவத்தோடு வாழ்க்கையை அணுகின.

இந்தக் கூறுகளிலிருந்து கொஞ்சம் விலகி, தனது தனித்துவமான அணுகுமுறையால் ஆலிஸ் தன்னை வேறுபடுத்திக்கொண்டார். வெள்ளையர்கள் x கறுப்பினத்த வர்கள் வாழ்க்கையைப் பேசுவதற்குப் பதிலாக, பலகாலமாக வெள்ளையர்களால் ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கும் கறுப்பினத்துக்கு உள்ளேயே ஆண்களால் பெண்கள் எப்படி வன்முறைக்குள்ளாக்கப் படுகிறார்கள் என்பதைப் பிரதான பேசுபொருளாக்குகிறார். வேறுவேறு துணைப் பிரதிகள் நாவலுக்குள் பொதிந்து வைக்கப்பட்டிருந்தாலும் பெண்கள் மீதே ஆலிஸின் கவனம் குவிந்திருக்கிறது.

சீலி – நாவலின் நாயகி. அழகற்றவள், சூதுவாது அறியாதவள், மிகச் சிறிய விஷயங்களைக்கூடக் கனவுகாணாதவள். இவளது கடிதங்கள்தான் முழு நாவலும். நாவலின் முதல் வரி இப்படித் தொடங்குகிறது: “நீ கடவுளைத் தவிர வேறு யாரிடமும் சொல்லாமல் இருப்பது நல்லது. சொன்னாயென்றால் உன் அம்மா செத்துப்போவாள்”. இந்த வரிகளைத் தொடர்ந்து, ‘அன்புள்ள கடவுளுக்கு’ என்று கடவுளுக்குக் கடிதம் எழுதுவதாக நாவல் ஆரம்பமாகிறது.

தன்னை இன்னல்களிலிருந்து மீட்டெடுத்துச்செல்லும்படி உருகி உருகி கடிதம் எழுதும் சிறுவன் வான்கா, முகவரி எதுவுமில்லாமல் தாத்தாவுக்குத் தபால் அனுப்புகிறான். தாத்தா தன் கடிதத்தைக் கண்டு தன்னை மீட்க வந்துவிடுவார் என நம்பிக்கையோடு காத்திருக்கும் செகாவின் ‘வான்கா’போலதான் இந்த சீலியும்; ஒட்டுமொத்த நாவலின் மனவோட்டமும்.

சீலி தன் பிறந்த வீட்டில் ‘அப்பா’வாலும், மிக இளம் வயதில் இரண்டாம்தாரமாக வாழ்க்கைப்பட்டுப்போன வீட்டில் கணவனாலும் இழைக்கப்படும் வன்முறைகளை மிக இயல்பாக ஏற்றுக்கொள்கிறாள். இவள் இப்படி என்றால், சீலியின் மகன் ஹார்ப்போவுக்கு வாழ்க்கைப்படும் சோஃபியாவின் சுபாவமோ சீலிக்கு நேர்எதிர்; சோஃபியா தன்னைச் சீண்டுபவர்களின் பற்களையெல்லாம் உடைத்துத்தள்ளுகிறாள்.

இப்படிப்பட்ட வீராவேசமிக்க கறுப்பின சோஃபியா தனது கோபத்தின் ஒரு சிறு துணுக்கை ஒரு வெள்ளைத் தம்பதியிடம் காட்ட நேரும்போது அவள் வாழ்க்கையும் சுபாவமும் முற்றாகப் புரட்டிப்போடப்படுகிறது. சீலி, நெட்டி, ஷுக் ஏவரி, சோஃபியா, ஸ்க்வீக், ஒலிவியா என விதவிதமான குணாம்சமுடைய பெண்களை, சிக்கலான உறவுப்பின்னலின் கயிற்றில் நடத்திச்செல்வதன் வழியாக நாவலை வேறு ஒரு உயர்ந்த தளத்துக்கு நகர்த்திக்கொண்டுபோகிறார் ஆலிஸ்.

இந்தத் துயரார்ந்த வலிகளெல்லாம் மிக எள்ளலான மொழியில் சிரிப்பூட்டும் பகடியான தொனியில் சொல்லப்படுகிறது. நமது வைக்கம் முகம்மது பஷீர்போல. சிரித்துக் கடந்த பிறகு பெரும் துயரம் அப்பிக்கொள்கிறது. இந்நாவலை மொழிபெயர்த்திருக்கும் ஷஹிதாவும் தனது ஆதர்சமாக பஷீரைக் குறிப்பிடுகிறார். ஷஹிதாவின் எழுத்துகளிலும் ஒருவித பஷீர்த்தனம் உண்டு. அதனாலேயே ஆலிஸ் வாக்கரிடம் இருக்கும் பஷீரை ஷஹிதாவால் இலகுவாக இனங்காண முடிந்திருக்கிறது.

– த.ராஜன்,

நன்றி: தமிழ் இந்து, 16/3/19.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027742.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *