அரை நூற்றாண்டுக் கொடுங்கனவு: கீழ்வெண்மணிக் குறிப்புகள்
அரை நூற்றாண்டுக் கொடுங்கனவு: கீழ்வெண்மணிக் குறிப்புகள், செ.சண்முகசுந்தரம், அன்னம் வெளியீடு, விலை: ரூ.150
சாதியாலும் வர்க்கத்தாலும் ஒருசேர வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வெண்மணி மக்களின் வரலாற்றுக் குறிப்புகள்தான் செ.சண்முகசுந்தரம் எழுதிய ‘அரை நூற்றாண்டுக் கொடுங்கனவு: கீழ்வெண்மணிக் குறிப்புகள்’ நூல். இந்த அரை நூற்றாண்டுகளில் காலம் எத்தனையோ நிகழ்வுகளைக் கடந்துபோயிருக்கிறது. கால மாயம் தன்னுள் பல காயங்களைக் கரைத்துவிட்டபோதும், இந்த வெண்மணித் தீ மட்டும் இன்னும் அணையாமல் தகிப்போடு கனன்றுகொண்டே இருக்கிறதே ஏன்?
ஏனென்றால், அதன் அடியில் இருக்கும் காரணிகள்தான். அவை அரை நூற்றாண்டு கடந்த பிறகும் மாறவில்லை. இன்னும் சாதியும் வர்க்க முரண்பாடும் அழித்தொழிக்கப்படவில்லை. இந்த இரண்டு கொடுந்தீயையும் அணைக்காமல் இருக்கும் வரை எப்படி அவியும் அந்த அரை நூற்றாண்டுக் கொடுந்தீ? இதற்கான காரணங்களை வரலாற்றுப்பூர்வமாக, ஆவண ஆதாரங்களோடு சொல்லிச் செல்கிறது இந்நூல். அன்றைய அவலங்களை நம் கண் முன் விரித்துப்போடுகிறது.
அடிப்படையில், வெண்மணியின் பிரச்சினை சாதிய அடக்குமுறையும் வர்க்க ஒடுக்குமுறையும்தான். இதற்கு எதிராய் வெகுண்டெழுந்த போராட்டத்தை அடக்கி ஒடுக்க ஆண்டைகளால் ஏவப்பட்டதுதான் அந்தக் கொடுந்தீ. அந்தக் கொடுந்தீயின் கோரப் பற்களை, அதன் பிளவுண்ட நாக்குகளை, விகார முகத்தை அதன் வெம்மை தணியாமல் கடத்துகிறது இந்நூல். அந்தக் கொடுந்தீக்கான அடிப்படை எது என்கிற அறிவுப் புரிதலை, அரசியல் புரிதலை உருவாக்கிக்கொடுக்கிறது.
இந்திய நிலவுடைமையின் தோற்றம், வளர்ச்சி, பிற குடியேற்றங்களால் ஏற்பட்ட மாறுதல்கள், நிலங்கள் யார் கட்டுப்பாட்டில் இருந்தன போன்றவற்றை சிந்து, மொகஞ்சதாரோ, ஹரப்பா தொடங்கி ஆரியர், பிற குடியேற்றங்களிலிருந்து எப்படிப் படிப்படியாகப் பண்ணையார்களிடமும் மிராசுதார்களிடமும் வந்துசேர்ந்தன என்பதையெல்லாம் ஒரு தேர்ந்த வரலாற்றாசிரியரின் பக்குவத்தோடு வெளிப்படுத்துகிறார் நூலாசிரியர்.
வெண்மணிப் பிரச்சினையின் களம் எப்படியிருந்தது என்பதை அடுத்த அத்தியாயம் விவரிக்கிறது. பி.சீனிவாச ராவ் தொடங்கி ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் வரை ஒரு பரந்துபட்ட அரசியல் களமாடல்களை அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. இன்று பெரிதும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுவரும், ‘வெண்மணியில் தந்தை பெரியார் நிலை என்ன?’ என்பதற்கும் அன்றைய கள ஆதாரங்களோடு விவாதிக்கிறது.
இறுதியாக, இந்திரா பார்த்தசாரதி எழுதிய ‘குருதிப் புனல்’, சோலைசுந்தரப் பெருமாள் எழுதிய ‘செந்நெல்’, மீனா கந்தசாமி எழுதிய ‘குறத்தி அம்மன்’, பாட்டாளி எழுதிய ‘கீழைத்தீ’ ஆகிய வெண்மணி குறித்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் பதிவான புதினங்களை வாசிப்பு விசாரணைக்கு உட்படுத்துகிறார். கீழ்வெண்மணி எனும் அரை நூற்றாண்டு வடுவை அகற்ற என்ன செய்யப்போகிறோம்? இன்னும் தொடரும் சாதிய, வர்க்க அடக்குமுறை, சுரண்டல்கள், வன்கொடுமைகளை நம்மால் அழித்தொழிக்க முடியவில்லை. அது முடியாத வரை இந்தத் தீ எரிந்துகொண்டேதான் இருக்கும்!
நன்றி: தமிழ் இந்து, 1/8/20
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818