அறம் செய்ய விரும்புவோம் – அகரம் விதைதிட்ட வெற்றிக் கதை
அறம் செய்ய விரும்புவோம் – அகரம் விதைதிட்ட வெற்றிக் கதை, அகரம் அறக்கட்டளை, பக்.128, விலை ரூ.90.
நடிகர் சிவகுமார், நடிகர் சூர்யாவின் முன்முயற்சியினால் 2006 ஆம் ஆண்டில் அகரம் பவுண்டேஷன் தொடங்கப்பட்டது. குடும்பச் சூழ்நிலை காரணமாக உயர் கல்வி கற்க முடியாமல் போகும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் 2010 ஆம் ஆண்டு அகரம் விதைத்திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை 1961 மாணவ, மாணவிகள் உயர் கல்வி கற்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள்.
அகரம் அறக்கட்டளைக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து, உண்மையிலேயே உதவி தேவைப்படும் தகுதி வாய்ந்த மாணவ, மாணவிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அப்படி கண்டுபிடிக்கப்பட்ட மாணவ, மாணவிகளின் வீட்டிற்கே அகரம் பவுண்டேஷனின் தன்னார்வலர்கள் நேரில் செல்கிறார்கள். அப்படி நேரில் சென்ற கள அனுபவங்களின் தொகுப்பே இந்நூல்.
கிராமப்புறங்களில், குடிசை வீடுகளில் திறமையுள்ள இளம் மாணவ, மாணவிகளின் குடும்பச்சூழ்நிலைகள், வறுமை, அடிப்படைத் தேவைகளைப் பெற அவர்கள் படுகிற பாடுகள், தனக்குப் பின் பிறந்த தம்பி, தங்கைகளுக்காக தன் படிப்பைத் தியாகம் செய்து வேலைக்குச் செல்லும் தமக்கைகள், தாய், தந்தையை இழந்தவர்கள் என பல்வேறு துயரமான அனுபவங்கள் கண்ணீரை வரவழைக்கின்றன.
இன்னொருபுறத்தில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் நடிகர் சூர்யாவைச் சந்திக்கும் ஒருவர் அகரம் உதவி பெற்று மேற்படிப்பு படித்து நல்ல வேலையில் இருப்பவராக இருக்கிறார்; இன்னொருவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து, சென்னை ஐஐடியில் எம்.டெக் முடித்து, ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படிக்கப் போகிறார். இவற்றைப் படிக்கிறபோது, அகரம் பவுண்டேஷன் உதவிக் கரத்தின் உன்னதத்தை உணர முடிகிறது.
நன்றி: தினமணி, 24/9/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818