அரசஞ் சண்முகனாரின் தமிழ்ப்பணி
அரசஞ் சண்முகனாரின் தமிழ்ப்பணி, பேரா.கு.ஞானசம்பந்தன், பக். 368, விலை ரூ. 370.
தமிழ் இலக்கண உலகிலும் இலக்கிய உலகிலும் பெரும்புலவராய்த் திகழ்ந்தவர் சோழவந்தான் அரசஞ் சண்முகனார். இவர் தொல்காப்பிய பாயிர விருத்தி, அன்மொழித்தொகை ஆராய்ச்சி, நுண்பொருள் கோவை, நவமணிக்காரிகை நிகண்டு போன்ற இலக்கண ஆய்வு நூல்களையும், சிதம்பர விநாயகர் மாலை. திருவடிப் பத்து, மாலைமாற்று மாலை, இன்னிசை இருபது, வள்ளுவர் நேரிசை உள்ளிட்ட படைப்பிலக்கியங்களையும் இயற்றியுள்ளார்.
பாண்டித்துரைத் தேவர் உருவாக்கிய மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். இவர் மதுரை சேதுபதி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி விலகியபோது அப்பணியில் சேர்ந்தவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
மேலும் மு.ரா.கந்தசாமிக் கவிராயர், சுப்பிரமணிய பாரதியார், சோமசுந்தர பாரதியார், உ.வே.சாமிநாதையர், மறைமலையடிகள், யாழ்ப்பாணம் பொன்னம்பலம் ராமநாதன் போன்ற தமிழறிஞர்களோடு நட்பு பூண்டிருந்தார் அரசஞ் சண்முகனார்.
குறிப்பாக மகாகவி பாரதியாரோடு நெருக்கமான பழக்கம் கொண்டிருந்தார். பாரதியாரின் வந்தே மாதரம் பாடலைப் போலவே அரசஞ் சண்முகனாரும் வந்தே மாதரம் என்ற தலைப்பில் எழுதியிருந்த பாடலைப் புகழ்ந்து பாரதியார் எழுதியுள்ளார்.
தமிழறிஞர் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் அரசஞ் சண்முகனாரிடம் பாடம் கேட்ட மாணவர்.
சித்திரக்கவி வகைகளிலும் கடினமானதான வடிவம் "மாலை மாற்று ஆகும். இந்த வடிவத்தையும் முயன்று பார்த்துள்ளார் இவர். திருக்குறள் மீது பெரும்பற்று கொண்ட அரசஞ் சண்முகனார், இரண்டு வரிகளில் ஒரு வினாவை எழுப்பி அதற்கு விடையாக மற்ற இரு வரிகளை வைத்து புதிய வகை வெண்பாவை எழுதிப் பார்த்துள்ளார். மேலும் திருக்குறளின் முதல் குறளுக்கு விருத்தியுரை எழுதியுள்ளார்.
தமிழுலகம் அதிகம் அறிந்திராத, ஆனால் அறிந்துகொள்ள வேண்டிய அருந்தமிழ் அறிஞர் அரசஞ் சண்முகனாரின் வாழ்வையும், பணியையும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
நன்றி: தினமணி, 8/3/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818