அரோரா

அரோரா, சாகிப்கிரான், புது எழுத்து வெளியீடு, விலை: ரூ.100

அரோரா’ என்பதற்கு மூல அர்த்தம் வைகறை. சூரியனின் மின்னூட்டம் பெற்ற துகள்கள் உயர் வளிமண்டலத்தில் இருக்கும் அணுக்களோடு மோதுவதால் வட, தென் துருவப் பகுதிகளில் சிவப்பாகவும் பச்சையாகவும் வானில் ஏற்படுத்தும் கதிர்வீச்சு ‘அரோரா’ என்று அழைக்கப்படுகிறது. இயற்கையும் அதன் வழிகளும் தம்மிடமுள்ள புதிரை, சில வேளைகளில் மாற்று விடைகளை, மனிதன் வழியாக வெளியிடுகின்றன. அப்படி வெளியிடும் சிறந்த கலை ஊடகங்களில் ஒன்றாகக் கவிதை இருக்கலாம் என்று சாகிப்கிரான் கவிதைகளைப் படிக்கும்போது தோன்றுகிறது.

நிகழ்ச்சிகள், அனுபவங்கள், அவற்றின் மாற்றங்களைத் தனிச்சுயத்தின் (ego) கண்கள் வழியாகப் பகுக்காமல் இயற்கை, காலத்தின் நீண்ட வெளியில் வைத்துக் காணும் பார்வை இவரது கவிதைகளில் செயல்படுகிறது. அப்படி நிகழும்போது தெரியும் விடியல் அல்லது துருவமுனை சோதியைத்தான் சாகிப்கிரான் அரோரா என்கிறாரோ?

சாகிப்கிரான் கவிதையில் நிகழ்ச்சியும் அனுபவமும் தொடர்வதில்லை; கதையாவதற்கு முன்னரே துண்டிக்கப்படுகிறது. கவிதை என்பது சொல்லால் ஆனது என்பதை சாகிப்கிரான் மறுபடியும் வெகு காலத்துக்குப் பின்னர் நினைவூட்டுகிறார். சிறகிலிருந்து பிரிந்த இறகுதான் பறவையின் சரித்திரத்தைத் தீட்டுகிறது.

ஆற்றின் இயற்கையைக் கால்கள் உணர்வதற்குப் பாறைகளைத்தான் தாண்ட வேண்டும். அதுவே மொழியின் சிறந்த அனுபவம். பாலம் கட்டப்படும்போது அது கருத்தின் அனுபவமாக மாறிவிடுகிறது. அந்தப் பாலத்தில் சமூகம் நடக்கட்டும். துடிக்கும் சின்னஞ்சிறு சொற்கள் தரும் அனுபவம் ‘அரோரா’. புலன்களுக்கும் மனத்துக்கும் புலப்படாதது; முழுமையாகக் கிரகித்துக்கொள்ள முடியாதது; அப்பாற்பட்டது; ஆனால், நமது வாழ்க்கை இயங்குவதற்கு ஆதாரமாக உள்ள உலகங்கள், அவற்றின் இயக்கங்களை அங்ககமாக இணைத்துக்கொண்டது சாகிப்கிரானின் கவிதையுலகம்.

பிரமிள், அபி, தேவதச்சன், ஆனந்த், ஷா அ, எம்.யுவன் என்று நீளும் மரபில் வருபவர் சாகிப்கிரான். அறிவியல் மற்றும் தத்துவத்தின் கரையில் நிற்கும் விந்தை இவர்கள் ஏற்படுத்தும் பொது அனுபவம். சி.மணியின் நேரடிப் பரிச்சயமும், அவர் மொழிபெயர்த்த ‘தாவோ தே ஜிங்’கின் அடிப்படைகளும் சாகிப்கிரான் மீது தாக்கம் செலுத்தியிருப்பதை உணர முடிகிறது.

அறிவின் பயனின்மையும், அறிவு எரிந்த பிறகே தோன்றும் அழகு குறித்த துக்கமும், எல்லையற்றதன் மீதான திகைப்பும் சாகிப்கிரானின் கவிதையில் தென்படுகின்றன. சில சமயங்களில் அனைத்தையும் உதறிவிட்டு, இயற்கையின் நீதியுணர்வில், அழகில், உண்மையில் நம்பிக்கையுடன் அமர்கிறது. அங்கே அறிவது வேறு. அது அமைதி. கடுகு இரைவதுபோல, ஆயிரம் கண்களுக்கு இடையே நாய் ஓடுவதுபோல ஓர் அமைதி சாகிப்கிரானின் கவிதையில் சாதிக்கப்பட்டுள்ளது. இது சமீப காலத்தில் சாத்தியப்படாத அமைதி.

– ஷங்கர்ராமசுப்ரமணியன்,

நன்றி: தமிழ் இந்து

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609


இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *