பாரதி ஓர் ஆச்சரியம்
பாரதி ஓர் ஆச்சரியம், ஜெ.கமலநாதன், குமரன் பதிப்பகம், பக்.96, விலை ரூ.50.
“பாரதி என்ற மகாகவிஞனிடம் நான் காணும் ஐந்து மிகப் பெரும் பெருமைகளை நீங்கள் உணரும்படி செய்வதே இந்நூலின் நோக்கம்” என்று கூறும் நூலாசிரியர் அந்த ஐந்து பெருமைகளைப் பற்றி இந்நூலில் எடுத்துரைத்துள்ளார். உரை விளக்கம் எதுவும் தேவையில்லாமல், எளிய நடையில் பாரதியார்தான் தமிழில் முதன்முதலில் கவிதை புனைந்தார்; அதற்குப் பின் அவர் மரபைப் பின்பற்றி பலரும் கவிதைகள் எழுதினர். தமிழில் புதிய போக்கு உருவாக பாரதி காரணமாக இருந்தார். இது பாரதியின் பெருமைகளில் ஒன்று.
மகளிர் விடுதலை, புதிய பாரதம், தமிழ் எழுச்சி, மூடத்தனங்களை வேரறுக்கும் வேகம் ஆகிய அனைத்துமே பாரதியை ஆராதிப்பவராக மாற்றியிருக்கிறது. இது பாரதியின் பெருமைகளில் இன்னொன்று என்கிறார் நூலாசிரியர்.
உலகின் மிகச் சிறந்த கவிதையாக பாரதியாரின் “அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்” என்ற கவிதையை குறிப்பிடும் நூலாசிரியர், கவிதையின் இறுதியில் வரும் வரியான “தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்” என்ற வரியை ஏன் பாரதியார் எழுதினார் என்பதற்கு அளிக்கும் விளக்கம், அதைத் தெரிந்து கொள்வதற்காக அவர் எடுத்த முயற்சிகள் வியக்க வைக்கின்றன. காட்டை எரிப்பதையா பாரதியார் விரும்பினார்? என்ற கேள்வியை எழுப்பி, “தன்னிச்சையாய் வளர்ந்து, இருண்டு, ஆபத்துகளை உள்ளடக்கி, மனித வாழ்வுக்குப் பயனற்றுக் கிடக்கும்” ஒன்றையே பாரதியார் காடு எனக் கருதினார், அதனால்தான் அதை எரிக்க விரும்பினார் என்று விளக்குகிறார்.
பட்டினி கிடக்கும் நிலை கூட பாரதிக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் பாரதி ஒரு செல்வந்தன் என்கிறார் நூலாசிரியர். “எனக்கு ஒரு வீடு இருக்கிறது. ஒரு கார் இருக்கிறது எனக் கூறும் பெருமித உணர்வை விடவும், எனக்கு ஒரு காவிரி இருக்கிறது. பொதிகை மலை இருக்கிறது, குற்றால அருவி இருக்கிறது வங்கக் கடல் இருக்கிறது, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இருக்கிறது என்று எண்ணி அடைகிற பெருமித உணர்வு மேலானது; உயர்வானது; உன்னதமானது. அத்தகைய உன்னத உணர்வு பாரதிக்கு இருந்தது” ஆகவே பாரதி ஒரு செல்வந்தன் என்கிறார் நூலாசிரியர். சுதந்திரம் அடைவதற்கு முன்பே மறைந்துவிட்ட பாரதி ” ஆடுவோமே, பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று பாடினார்.
பெண் விடுதலைச் சிந்தனை இப்போது வளர்ந்துவிட்டது. ஆனால், அக்காலத்திலேயே “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று பெண் விடுதலைக் கருத்துகளைப் பாடியவர் பாரதி. எனவே பாரதி ஒரு தீர்க்கதரிசி என்கிறார் நூலாசிரியர். பாரதியார் என்ற மாபெரும் கவிஞனின் சாரத்தை மிகத் தெளிவாக, எளிமையாக விளக்குவதில் இந்நூல் பெரும் வெற்றி கண்டிருக்கிறது.”
நன்றி: தினமணி, 30/3/2020.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818