பாரதி பாட்டுக்கொரு பட்டிமன்றம்
பாரதி பாட்டுக்கொரு பட்டிமன்றம் , அரங்க பரமேஸ்வரி. மங்கை பதிப்பகம், பக்.288. விலை ரூ.220;
பொதுவாக பட்டிமன்ற நூல் வகையைச் சேர்ந்த புத்தகங்கள் செவ்வியல் இலக்கிய கருத்துகளையோ வாழ்வியல் கருத்துகளையோ மேடையில் பேச உதவும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். மகாகவி பாரதியின் படைப்புகளின் அடிப்படையில்அப்படிப்பட்டபுத்தகம் இதுவரை வெளியானதில்லை என்று ஆசிரியர் கூறுகிறார். அந்த வகையில் இது ஒரு புதிய முயற்சி.
அதே சமயத்தில் இது பாரதியாரின் கவிதைகளைப் பற்றிய ஆய்வை வித்தியாசமாக அணுகும் புத்தகமாகவும் உள்ளது என்று கூறலாம். எனினும் தோற்றத்தில் இது ஆய்வு நூல் இல்லை. பாரதியின் கவிதைகளை பத்து தலைப்புகளில் பட்டிமன்ற அமைப்பில் அலசுகிறது. “பாரதியின் பாடல்களில் பெரிதும் விஞ்சி நிற்பது மொழிப் பற்றே – நாட்டுப் பற்றே’, “பாரதி பாடல்களின் ஏற்றத்துக்குக் காரணம் எழுச்சி நடையா – இலக்கியச் சுவையா’… உள்ளிட்ட தலைப்புகளில் இரு தரப்பிலும் வாதங்களை முன்வைக்கும் இரு அணிகள், மின்னல் கீற்று போல பாரதியின் வரிகளை எடுத்துக்காட்டுவதும், அணிகளின் நயமான வாதங்களுக்கு இடையே அவ்வப்போது புகுந்து மற்றுமொரு கோணத்தை வெளியிடும் நடுவர், இறுதியில் செறிவாக அவற்றைத் தொகுத்து தீர்ப்பு அளிப்பதுவுமாக பட்டிமன்ற பாணியில் புத்தகம் அமைந்திருப்பது புதுமையானது. பட்டிமன்ற காட்சியை மனதில் வைத்துப் படிக்க சுவாரஸ்யம் கூடுகிறது.
இந்தப் புத்தகத்தை மாணவர்கள் இரு வகையிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். மகாகவியின் எழுத்தையும் சிந்தனையையும் பட்டிமன்ற ரீதியில் அணுக இது உதவும். அவரது இலக்கிய நயத்தை மேலும் நுகர்வதற்கும் தமது இலக்கிய ரசனையை விகசிக்கச் செய்வதற்கும் கூட இது உதவும்.
நன்றி: தினமணி, 6/9/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818