என் பெயர் நுஜூத்

என் பெயர் நுஜூத், வயது 10, விவாகரத்து ஆகிவிட்டது!, நுஜூத் அலி, உடன் இணைந்து டெல்ஃபின் மினோவி, ஆங்கிலத்தில்: லிண்டா கவர்டேல், தமிழில்: சூ.ம.ஜெயசீலன், வெளியீடு:டிஸ்கவரி புக் பேலஸ், விலை: ரூ.180.

யேமன் நாட்டின் கார்ட்ஜி கிராமத்தில் பிறந்த நுஜூத், ஒரு விஷயத்தில் தன் அம்மாவை விஞ்சிவிடுகிறாள். அம்மாவுக்கு 16 வயதில் திருமணம் நடக்க, நுஜூத்துக்கோ பத்து வயதிலேயே மணமாகிவிடுகிறது. அம்மாவுக்கு 16 குழந்தைகள் பிறந்தன. மூன்று முறை கரு கலைந்தது. நான்கு குழந்தைகள் இறந்துவிட்டன. அப்பாவுக்குக் கூலி வேலை. வறுமைக்கு வீட்டுப் பொருட்கள் ஒவ்வொன்றாக விற்கப்பட, நுஜூத்தும் திருமணத்தின் பெயரால் வீட்டைவிட்டு வெளியேற்றப்படுகிறாள்.

தன் குழந்தைக்கு நிகழ்த்தப்படும் அநீதிக்கு அம்மா அனுமதி மறுக்க, நுஜூத்துக்குத் திருமணம் செய்துவைப்பதன் மூலமாக அவளது பங்கான ஒரு கை சோறு குறையும் என்கிறார் அப்பா. 30 வயது ஃபேஷ் அலி தாமருக்கு மணம் முடிக்கப்பட்டாள் பத்து வயது நுஜூத். நுஜூத் பருவம் எய்தும்வரை அவளைத் தொடுவதில்லை என்று உறுதி அளித்திருந்த ஃபேஷ் அலி தாமர், அதைக் காற்றில் பறக்கவிட்டான். சூறைக்காற்றால் வேருடன் பிடுங்கி எறியப்பட்ட சிறு பூச்செடிபோல் ஆனது நுஜூத்தின் நிலை. அவளது மறுப்பு அவனை வெறிகொண்டவனாக மாற்றியது. அடியும் வன்முறையும் எல்லை மீறின. தன் பெயரைத் தவிர, வேறு எதையும் தெளிவாக எழுத, படிக்கத் தெரியாத நுஜூத் யாருக்கும் தெரியாமல் நீதிமன்றத்துக்குச் சென்றதுதான் அவளது விடியலுக்கான முதல் புள்ளி. தெரிந்தவர் சொன்ன வழிகாட்டுதலில் அதைச் செய்தாள்.

நீதிபதியைச் சந்திக்க வேண்டும் என்று சொன்ன அந்தப் பத்து வயதுக் குழந்தையை அங்கிருந்தோர் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஆனால், தான் கடந்து வந்த வலியை அவள் சொன்னபோது, அவர்களது முகங்களில் அதிர்ச்சி. 2008-ல் விவாகரத்து பெற்றபோது, மிகச் சிறிய வயதில் விவாகரத்து பெற்ற உலகின் முதல் பெண் என்று நுஜூத் அடையாளப்படுத்தப்பட்டாள். விவாகரத்து பெற்ற அன்று பொம்மையும் சாக்லெட்டும் வேண்டும் என்று கேட்ட அந்தக் குழந்தை, பிறகு தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டாள்.

தான் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க உதவிய நீதிமன்றத்தின் மீது அவளுக்கு அலாதி பிரியமும் மதிப்பும். அதனாலேயே தான் வளர்ந்த பிறகு வழக்குரைஞர் ஆக வேண்டும் என்று சொல்லியிருக்கிறாள். இந்த நூலை வாசிக்கும்போது பத்து வயதுக் குழந்தைக்கு இவ்வளவு அனுபவமா என்கிற ஆச்சரியத்தைவிட, இவ்வளவு துயரங்களையா அவள் சந்தித்தாள் என்கிற வேதனைதான் ஏற்படுகிறது. ஆனால், நுஜூத்தின் துணிச்சல் மிகுந்த செயல்பாடு நம்பிக்கை அளிக்கிறது. 38 மொழிகளைத் தொடர்ந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இந்நூல், அடக்குமுறைக்கும் ஒடுக்குதலுக்கும் ஆளாக்கப்படுவதில் உலகம் முழுவதும் பெண்கள் நிலை ஒன்றுதான் என்பதை உணர்த்துவதோடு அதைக் களைய வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைக்கிறது.

நன்றி: தமிழ் இந்து,16/10/21

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609


இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *