இலக்கியம் வளர்த்த இஸ்லாமியத் தமிழ்ச் சான்றோர்
இலக்கியம் வளர்த்த இஸ்லாமியத் தமிழ்ச் சான்றோர், எஸ்.சேகு ஜமாலுதீன், வானதி பதிப்பகம், விலை: ரூ.175.
அரிதான ஆளுமைகளைக்கூட உரிய வகையில் அங்கீகரிக்கவும் கொண்டாடவும் வரலாற்றில் அவர்களை ஆவணப்படுத்தவும் தவறும் சமூகம் என்ற பெயர் தமிழ் முஸ்லிம் சமூகத்துக்கு உண்டு. இந்த அவப்பெயரைத் துடைத்தெறிய மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஒன்றாக ‘ஆலிம் முகம்மது சாலிஹ் கல்விக் குழும’த்தின் செயலர் எஸ்.சேகு ஜமாலுதீன் படைத்திருக்கும் நூலைக் குறிப்பிடலாம். அவரைக் கவர்ந்த பதினாறு இஸ்லாமியப் படைப்பாளிகளை வரிசைப்படுத்திக் கொண்டாடும் இந்நூல் நல்ல ஆவணமாகவும் வந்திருக்கிறது.
சீறாப்புராணக் காப்பியச் சுவைச் கொண்டு, இலக்கிய அன்பர்களையெல்லாம் கட்டிப்போட்ட உமறுப் புலவர், எளிமையும் இனிமையும் கலந்த தனித்துவப் பாடல்களைத் தந்த குணங்குடி மஸ்தான் சாகிபு, ராமாயண ஆய்வு நூல்களைப் படைத்தளித்த நீதியரசர் மு.மு.இஸ்மாயில், சாதாரண ஒரு மனிதனை மகானாக மாற்றும் சக்தி நூல்களுக்கு உண்டு என்று கூறிய எளிய மக்களின் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் என்று இந்த நூல் வரிசைப்படுத்தியிருக்கும் ஆளுமைகளெல்லாம் கலை – இலக்கிய வகைமை அரசியலுக்குள் சிக்கிக்கொள்ளாமல் சாதனையாளர்களாகப் பன்மைத்துவப் பார்வையைப் பெற்றுவிடுகிறார்கள்.
இன்னமும், ‘சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’, ‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’ போன்ற பாடல்களால் மக்கள் மனதில் நிறைந்திருக்கும் கவிஞர் கா.மு.ஷெரீப், கவிக்கோ அப்துல் ரஹ்மான், தன்னம்பிக்கைத் தூண்டுகோல் அப்துல் ரஹீம், இறையடியான், ஜே.எம்.சாலி, சாயுபு மரைக்காயர், தோப்பில் முகம்மது மீரான், கவிஞர் அப்துல் காதர், கவிஞர் நீரை அத்திப்பூ, கவிஞர் மனுஷ்ய புத்திரன் என்று தேர்ந்தெடுத்துக்கொண்ட ஆளுமைகளின் வாழ்க்கை வழியே ஒரு காலப் பயணத்துக்குள் வாசகர்களை அழைத்துச்செல்கிறது இந்நூல்.
தமிழ் உலகுக்கு இந்த ஆளுமைகள் வழங்கிய பங்களிப்புகள் மட்டுமல்லாமல், அவர்கள் பற்றிய தகவல்களையும், இன்றைய இளைய தலைமுறைக்கு மிக நேர்த்தியாகப் புரியும்படி அறிமுகப்படுத்துகிறது இந்நூல். தமிழின் பெருமையைத் தமது லட்சியமாகக் கொண்டு இலக்கியம், சமூக நல்லிணக்கத்தை வலிமைப்படுத்தும் நோக்கில் இயங்கிய படைப்பாளிகள் பற்றிய இதுபோன்ற பதிவுகள் இன்னும் அதிகம் வர வேண்டும். அது இன்றைய இளைய சமூகத்தினருக்குத் தேவையும்கூட.
நன்றி: தமிழ் இந்து, 31/7/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818