இஷ்வாகு குலதனம் என்னும் ஸ்ரீரங்க மஹாத்ம்யம்

இஷ்வாகு குலதனம் என்னும் ஸ்ரீரங்க மஹாத்ம்யம், லிப்கோ பப்ளிஷர்ஸ் (பி) லிட்., பக்.272, விலை ரூ.150.

‘கோயில்‘ என்றாலே வைணவர்களுக்கு ‘ஸ்ரீரங்கம்‘தான். இக்கோயின் சிறப்பை ‘ஆராத அருளமுதம் பொதிந்த கோயில்; அம்புயத்தோன் அயோத்தி மண்ணில் களித்த கோயில்; செழுமறையின் முதலெழுத்துச் சேர்த்த கோயில்; தீராத வினை அனைத்தும் தீர்க்கும் கோயில்; திருவரங்க மெனத் திகழுங் கோயில்தானே‘ என அதிகார சங்கிரகம் போற்றுகிறது. ஸ்ரீரங்கமே வைணவர்களுக்குப் பெரிய கோயிலாகும்.

‘பேரும் பெரியது, ஊரும் பெரியது‘ என்று சொல்வது வழக்கம். காரணம் ‘கோயில் -பெரியகோயில்; பெருமாள் – பெரிய பெருமாள்; தாயார்- பெரிய பிராட்டியார்; ஊர் – பேரரங்கம்; தளிகை – பெரிய அவசரம்; வாத்தியம் – பெரிய மேளம்; பக்ஷ்யங்கள் – பெரிய திருப்பணியாரங்கள்‘ என்பதால்தான்.

விபீஷணன் வழியாகக் காவிரியாறு அடைந்து, தர்மவர்மா என்னும் சோழ ராஜனால் அதே காவிரி ஆற்றங்கரையிலே இஷ்வாகு குலதனமான ரங்கநாதப் பெருமான் பெருமை கொண்டு எழுந்தருளி இருப்பதனால், இந்த நகரத்திற்கு ஸ்ரீரங்கம் என்னும் சிறப்புப் பெயர் வந்தது. இதை முதல் பகுதியான ‘ஸ்ரீரங்க மஹாத்மியம்‘ விரிவாக எடுத்துரைக்கிறது.

ஸ்ரீரங்கத்தின் சிறப்பு, ஸ்ரீரங்கம் நூற்றெட்டுத் திருப்பதிகளுள் சிறந்தது என்பதன் காரணம், திக் தேவதைகளின் அமைப்பு, கருடாழ்வாரின் அமர்ந்த திருக்கோலத்தின் விசேஷம், பழந்தமிழ் நூல்களில் அரங்கமும் அரங்கநாதனும் பற்றிய செய்திகள், ஸ்ரீரங்கநாதரின் உற்சவ விசேஷங்கள், ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றியுள்ள திவ்ய தேசங்கள் மற்றும் சிவத் திருத்தலங்கள், ஆண்டாள் சாந்த ஸ்வருபிணியான விதம், முதலியவை விளக்கப்பட்டுள்ளது.

ஒன்பது புண்ணிய தீர்த்தங்கள், ஏழு பிரகாரங்கள், பூலோகம், புவர்லோகம், ஸவர்லோகம், மஹர்லோகம், ஜநோலோகம், தபோலோகம், ஸத்யலோகம் ஆகிய ஏழு திருச்சுற்றுகளைக் கொண்டது. இதை ‘ஸப்த ப்ராகார விசேஷங்கள்‘ என்ற பகுதி விரிவாக விளக்குகிறது. மேலும், ஆழ்வார்கள் சரித்திரம், ஆசார்யர்களின் சரித்திரம் முதலியனவும் இந்நூலில் உள்ளன. வைணவர்கள் மட்டுமல்லர் சைவர்களும் படித்தறிய வேண்டிய பக்தி இலக்கியம்.

நன்றி: தினமணி, 18/12/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *