க.நா.சு. கவிதைகள்
க.நா.சு. கவிதைகள், பதிப்பாசிரியர்: இளையபாரதி, விலை: ரூ.165
புதுக்கவிதையின் தந்தையாக ந.பிச்சமூர்த்தி பொதுவில் அறியப்படுகிறார்; பாரதிக்குப் பிறகு வசனகவிதையை முயன்ற கு.ப.ராவும் புதுமைப்பித்தனும் முன்னோடிகள். ஆனால், புதுக்கவிதை என்ற பெயரை அந்த வடிவத்துக்குப் புனைந்ததோடு மட்டுமின்றி புதுக்கவிதைக்கு, இருபதாம் நூற்றாண்டு இந்திய, தமிழ் வாழ்க்கையின் நவீனத்தையும் லட்சணங்களையும் அழகியலையும் ஏற்றியவர் க.நா.சுப்ரமணியம்.
புதுக்கவிதை தன்னை நிறுவிக்கொண்ட கதை அவ்வளவு எளிதானதல்ல. இலக்கண வயப்பட்ட சட்டகங்களிலிருந்து மட்டுமல்ல, பழமையின் இறுகிய தடைகொண்ட மனோபாவங்களிலிருந்தும், சிந்தனை மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பெற்ற உருவம் புதுக்கவிதை. ஒரு உயிர் தன் உடலை மறுதகவமைப்புக்கு உட்படுத்தியதற்குச் சமமானது.
புதுக்கவிதையின் கதையை க.நா.சுப்ரமணியத்தின் புதுக்கவிதை முயற்சிகளை அறிமுகப்படுத்தும் ஞானக்கூத்தனின் முன்னுரை, கவிதை மாணவர்களுக்கும் வாசகர்களுக்கும் அரிய சேகரிப்பாகத் திகழக்கூடியது.
நேரடிக் கூற்று, மரபின் சுமையற்ற சுதந்திரம், படிம, தத்துவச் சுமையின்மை போன்ற அம்சங்களுடன் அன்றாட வாழ்வின் பொருட்களும் சத்தங்களும் சாதாரணத்துவத்துடனேயே உலவும் இடமாகத் தமிழ்ப் புதுக்கவிதை வடிவத்துக்கு ஒரு சிறந்த முன்வரைவை க.நா.சு உருவாக்கியிருக்கிறார். சமூகம் பொதுவில் ஏற்றுக்கொள்ளாத மனத்தின் இயல்புகளை மனத்தடையின்றிச் சுயஅம்பலமாக வெளிப்படுத்தும் ஊடகமாகவும் புதுக்கவிதையை அவர் மாற்றுகிறார். சமூகம் ஏற்றிவைத்திருக்கும் பிம்பங்கள், கலாச்சாரப் புனிதங்களைப் படைப்பில் கட்டிக்காக்க வேண்டியதில்லை என்ற தொனியை அவர் கவிதையில் பார்க்க முடிகிறது.
வாழ்வு ஒருகட்டத்தில் பழக்கத்தின் செக்குமாட்டுத்தனத்தில் உறைந்துவிட்டது. பாலுறவு, மதம், சிந்தனை எதுவுமே அவனை விடுவிக்கவில்லை. இந்நிலையில் ஒரு நம்பிக்கையின்மை, ஒரு சந்தேகம், விடை போன்று தொனிக்கும் விடை, ஆழ்ந்த புரியாமை உணர்வு, ஒரு போதாமை மற்றும் அமைதியை உருவாக்க அவர் ஒரு வார்த்தைக் கூட்டத்தைச் சுழற்றி மேயவிடுகிறார். க.நா.சு.வின் கவிதையில் வரும் பிராணிகளும் பறவைகளும் அழகு, சுதந்திரம் அல்லது எந்தத் தத்துவப் பொருண்மையுடையதான குறியீடுகளாகவும் இல்லை. அவை சிறியதாக இருந்தாலும் தனித்த குணமுடைய மற்றமையின் அழகுடைய உயிர்கள். அந்தப் பிராணிகளுக்கும் பறவைகளுக்கும் க.நா.சு. கவிதையில் அளித்த சுதந்திரம் சாதாரணமானதல்ல. இன்றைக்கும் க.நா.சு.வின் வாஞ்சையான பரிசுகள் என்று பெருமிதமாக கூஃபி, விளையாடும் பூனைக்குட்டி, சிட்டுக்குருவி, பூனைக்குட்டிகள் ஆகிய கவிதைகளை இளம் வாசகர் முன் எடுத்துவைக்க முடியும். </p><p>க.நா.சு. தனது அறிவு, பிரக்ஞையின் போதத்திலிருந்தும் சலிப்பிலிருந்தும் விடுபட்டுத் தன்னை இழக்கும் இடமாக இக்கவிதைகளைப் பார்க்க முடிகிறது.
தமிழ் நவீன இலக்கியப் பரப்பில் முக்கியத் தடம் பதித்த சாதனையாளர்களை இருவகையாகப் பிரிக்கலாம். தனக்கென ஒரு பார்வையையும் உலகத்தையும் உருவாக்கி அதை முற்றிலும் செழுமைப்படுத்தி அந்த வெற்றியின் பலன்களை முற்றிலும் நுகர்ந்து அது தரும் அதிகாரத்தையும் செல்வாக்கையும் சுவைத்தவர்கள் முதல் பிரிவினர். படைப்பின் தீராத சவால்களால் தூண்டப்பட்டு, நிறைவின்மையின் தொடர்ந்த அலைக்கழிப்புடன் வெற்றி, தோல்வியை அறியாமலேயே பல்வேறு சாத்தியங்களின் விதைகளைத் தூவியவர்கள் இரண்டாம் பிரிவினர். அவர்கள் பண்படுத்தி, விதைகள் இட்ட நிலம் அவர்களின் படைப்பு வாழ்க்கைக்குப் பின்னும் செழுமையாகவே இருக்கும். முழுமையின்மையிலிருந்து கொப்பளிக்கும் படைப்பூக்க நிலம் அது. இந்த இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவர்தான் க.நா.சுப்ரமணியம்.
தமிழில் நாவல், சிறுகதைகளின் வடிவம் மற்றும் பொருள் சார்ந்து தனது மொழிபெயர்ப்புகள் மற்றும் விமர்சனங்கள் மூலம் திட்டமான தரமதிப்பீட்டைத் தொடர்ந்து வலியுறுத்திவந்தவர் க.நா.சு. அதேபோலவே புதுக்கவிதை தொடர்பாகவும் அந்தக் கலைவடிவம் நவீன வாழ்க்கை சார்ந்து துறக்க வேண்டியதும், ஏற்க வேண்டியதுமான அம்சங்களையும் நிகழ்த்திக்காட்டுவதற்காகவே தனது கவிதைகளை எழுதியுள்ளார் என்றும் சொல்லலாம். அதனால்தான், தனது கவிதைகளை அவர் சோதனைகள் என்று சொல்கிறார்.
க.நா.சு.வின் தொடர்ச்சியாக நகுலன், விக்ரமாதித்யன், ஆத்மாநாம், சுகுமாரன், சமயவேல், பா.வெங்கடேசன் என்று ஒரு ஆரோக்கியமான சங்கிலி இன்னும் நீடிப்பது குறிப்பிடத்தக்கது. க.நா.சு. நூற்றாண்டு கடந்துவிட்ட நிலையில், க.நா.சு. எழுதிய கட்டுரைகள், முன்னுரைகளையும் சேர்த்து ஜே.சுவாமிநாதனின் அட்டை ஓவியத்துடன் வெளிவந்திருக்கும் இந்த நூல் கவிதை வாசகர்களுக்கு மிகவும் அவசியமானது.
-ஷங்கர்ராமசுப்ரமணியன்
நன்றி: தமிழ் இந்து, 6/4/19
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818