கடுவழித்துணை
கடுவழித்துணை, கமலதேவி, வாசகசாலை பதிப்பகம், விலை: ரூ.150.
இறப்பு வீடுகளின் துயரம்
நேரடியான கதைமொழியுடன் தமிழ்ச் சூழலில் அறிமுகமானவர் எழுத்தாளர் கமலதேவி. ‘சக்யை’, ‘குருதியுறவு’ என அடுத்தடுத்து ஒரே ஆண்டில் (2019) இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ‘கடுவழித்துணை’ (2020) இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. திருச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளே இவரது கதைகளின் நிலம். கிராமமும் நகரமும் கதைகளில் மாறி மாறி வருகின்றன.
கதையின் திறப்பு ஏதாவதொரு ஒற்றைச் சொல்லில் மறைந்து கிடக்கும்படி எழுதுவது ஒரு வகை. அந்த மந்திரச் சொல்லைப் பிடித்துக்கொண்டுதான் மொழியால் நெய்து வைத்திருக்கும் புனைவுக்குள் பயணிக்க முடியும். அந்த அனுபவம் கமலதேவியின் ‘கடுவழித்துணை’ தொகுப்பை வாசிக்கும்போது ஏற்பட்டது.
கதைகளைத் தூக்கணாங்குருவிக் கூட்டைப் போன்று பின்னி வைத்திருக்கிறார். இறப்பு இவர் கதைகளில் பிரதான இடத்தைப் பெற்றிருக்கிறது. ஊர்க்கிணற்றில் விழுந்த வாளியைப் பாதாளக் கொலுசு போட்டுத் தேடுவதைப் போன்றதுதான் இவரது கதைகள். நினைவுச்சுழலின் துழாவலில் மேலெழும் நீர்க்குமிழ்களாக கமலதேவி கதைகளின் பெண்கள், தங்கள் துயரங்களைப் புறவயப்படுத்துகிறார்கள். மென்மை யான, ஒரேமாதிரியான குரலே கதைகளில் கேட்கிறது. இறப்பு வீட்டை மையமாகக் கொண்டு பேசுவதன் வழியே, சாதிய அமைப்பின் தீவிரத்தையும் பேசுகிறார்.
இந்தத் தொகுப்பில் பதினைந்து கதைகள் உள்ளன. இந்தக் கதைகளினூடாக வெளிப்படும் கதாபாத்திரங்கள் அனைத்துக்கும் துயரத்தின் சாயை படிந்த ஒரே முகம்தான். கமலதேவி ஒரு கதைக்குத் தேவையான துணைக் காரணிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தியிருக்கிறார்.
ஒவ்வொரு கதையிலும் கடந்த காலமும் தற்காலமும் முன்னும் பின்னுமாக அலைவுறுகின்றன. அதனால், கதையின் ஒவ்வொரு வரியும் முக்கியமானது. பெண்கள்தான் இவரது கதைகளின் முக்கியப் பாத்திரங்கள். பெண் எழுத்தாளர்களின் கதைகளில் இந்தத் தன்மை இயல்பாகவே அமைந்துவிடுகிறது.
நன்றி: இந்து தமிழ், 31/10/2020
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030782_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818