கிறுக்கு ராஜாக்களின் கதை
கிறுக்கு ராஜாக்களின் கதை – சரித்திரக் கிறுக்கர்கள் முதல் சமகாலச் சர்வாதிகாரிகள் வரை, முகில், விகடன் பிரசுரம், பக்.264, விலை ரூ.190
எல்லாருக்கும் தெரிந்த சர்வாதிகளான ஹிட்லர், முசோலினியை விட மிகக் கொடூரமானவர்களாக உலகில் பல சர்வாதிகாரிகள் இருந்திருக்கின்றனர்.
அவர்களில் 21 சர்வாதிகாரிகளின் கதை இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
3800 ஆண்டுகளுக்கு முன் பாபிலோனியாவை ஆண்ட ஹம்முராபியின் காலத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு மரண தண்டனை உண்டு. இல்லையென்றால் குற்றம் சுமத்தியவனுக்கு மரணதண்டனை இருந்திருக்கிறது. கி.பி.1547 இல் ரஷ்யாவில் கிரெம்ளின் மாளிகைக்கு மேற்கே அர்பாட் என்ற இடத்தில் தீப்பற்றிக் கொண்டது.
2700-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். அப்போது ரஷ்யப் பேரரசர் இவான், தீயை அணைப்பதற்கு எந்தவித நடவடிக்கையையும் எடுக்காமல், நகரின் அருகே இருந்த கிராமத்துக்குச் சென்று எரியும் தீயிலிருந்து வரும் புகையை ஒயினை அருந்தியபடியே பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.
மொராக்கோவில் கி.பி.1672-இல் பதவியேற்ற இஸ்மாயில், தன் முன் நின்று நிமிர்ந்து பார்த்து யார் பேசினாலும் அவரைக் கொன்று புதைக்க ஆணையிட்டார். துர்க்மெனிஸ்தானின் அதிபராக இருந்த நியாஸாவின் காலத்தில் தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் அரசின் வசம் சென்றன. எதை மக்கள் பார்க்க வேண்டும், எதை வாசிக்க வேண்டும், எதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அரசு முடிவெடுத்தது. தினமும் நியாஸாவே வண்ண வண்ண உடைகளுடன் தலைப்புச் செய்தியாகக் காட்சி தந்தார். இது நடந்தது 1992 இல்.
இவ்வாறு இந்நூல் முழுக்க பல சர்வாதிகாரிகளின் கொடூரமான செயல்களை சுவையான கதை வடிவில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.
நன்றி: 27/5/19, தினமணி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818