கொங்கு மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு
கொங்கு மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு, மு.நீலகண்டன், கனிஷ்கா புக் ஹவுஸ், பக்.184, விலை ரூ.160.
பெளத்தம் கொங்கு மண்டலத்தில் பரவியது பற்றியும், வீழ்ச்சியடைந்தது பற்றியும் விரிவாகப் பேசும் நூல். நூலின் தொடக்கத்தில் கொங்கு மண்டலம் அமைந்துள்ள நிலப்பகுதி, கொங்கு என்று பெயர் வரக் காரணம்,கொங்கு நாடு குறித்து தமிழ் இலக்கியங்களான பதிற்றுப்பத்து, புறநானூறு, அகநானூறு, நற்றிணை நானூறு, சிலப்பதிகாரம் ஆகியவற்றில் காணப்படும் இலக்கியச் சான்றுகள், கொங்கு மண்டலத்தில் ஆட்சி புரிந்த குறுநில மன்னர்கள், சிற்றரசர்கள்,சேர, சோழ, பாண்டியர்கள், விசய நகர அரசுகள் குறித்த வரலாற்றுச் சான்றுகள் ஆகியவை மிக எளிமையாக, தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
கொங்கு மண்டலத்தில் பெளத்தம் பற்றிய வரலாற்று ஆய்வு எனினும் பெளத்த தத்துவம் குறித்த விரிவான விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன. புத்தர் கூறிய அஷ்டாங்க மார்க்கம் எனக்கூறப்படும் வாழ்க்கைக்கான எட்டு வழிகள் பற்றியும், வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய அறச்செயல்கள், தவிர்க்க வேண்டிய செயல்கள் பற்றியும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.
தம்மபதம் என்றால் என்ன? பெளத்தத்தின் தியானமுறைகள் யாவை? ஆகியவற்றுக்கான விளக்கங்களும் உள்ளன.கி.மு.3 ஆம் நூற்றாண்டில் மெளரியப் பேரரசர் அசோகரின் காலத்தில்தான் பெளத்தம் தமிழகத்தில் பரப்பட்டது.
அப்போது களப்பிரர்கள் தமிழகத்தை ஆண்டனர். அவர்களுடைய ஆதரவுடன் பெளத்தம் வளர்ந்தது. சங்கமித்திரர், திக்நாகர், போதி தருமர், காஞ்சி தருமபாலஆசாரியர் உட்பட பல புகழ்பெற்ற பெளத்தர்கள் தமிழகத்தில் இருந்தனர். களப்பிரர் ஆட்சி காலத்துக்குப் பிறகு பெளத்தம் வளர்ச்சியடையவில்லை. அதற்குப் பிறகு தோன்றிய பக்தி இயக்கம் பெளத்த மத வீழ்ச்சிக்குக் காரணமானது.
பெளத்தம் சார்ந்த கல்வெட்டுகள், சிலைகள், பெளத்த துறவிகள் தங்கியிருந்த குகைகள், இலக்கியச் சான்றுகள் ஆகியவை பற்றியும் இந்நூல் எடுத்துரைக்கிறது.
பௌத்தம் தோன்றியதற்கான சமூகப் பின்னணி குறித்து சுட்டிக்காட்டும் இந்நூல், பௌத்த தத்துவத்தையும் சிறப்பம்சங்களையும் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது.
நன்றி: 27/5/19, தினமணி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818