மாற்று சினிமா
மாற்று சினிமா, (பத்து இயக்குநர்களின் நேர்காணல்கள்), தொகுப்பு எஸ். தினேஷ், பேசாமொழி பதிப்பகம், விலை 180ரூ.
தமிழ் சினிமா கொஞ்சமாக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. அதற்கான ஆரம்ப யத்தனங்கள் இதில் தெளிவாகக் காணக் கிடைக்கிறது.
இயக்குநர்கள் நவீன், மணிகண்டன், விக்ரம் சுகுமாரன், கார்த்திக் சுப்புராஜ், கமலக்கண்ணன், பாலாஜி தரணிதரன், சீனு ராமசாமி, ரமேஷ், அருண் குமார் என பட்டியல் நீள்கிறது. வெவ்வேறு இயக்குநர்களின் மனப்பாங்கு, சினிமாவைக் குறித்த சிந்தனை நலம் புரிபடுகிறது.
சினிமாவை பிறிதொரு இடத்திற்குக் கொண்டு செல்ல அவர்களின் திட்டம், சினிமாவை எப்படி அணுகுவது என்பதற்கான ஆரம்ப விசாலம் எல்லாமே இந்தப் புத்தகத்தில் கிடைக்கிறது. தனித்துவ அடையாளம் என்பது என்ன என்பதின் புரிந்துணர்வும் இதில் புரிபடுகிறது. அவர்கள் செய்யத் தவறியதும், செய்தவிதமும் எளிய சினிமா வாசகர்களுக்குப் போய்ச் சேர்கிறது.
இதுபோல் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகி இருக்கிறது. அதுவும் அனேகமாக ஒருவரின் பார்வையில்தான். இதில் பத்து இயக்குநர்களின் பார்வை, புரிதல், சினிமாவை உணர்தல் என அனைத்திற்கும் விடை சொல்கிறது இந்தப் புத்தகம். சினிமாவின் ஆரம்ப புரிதலுக்கு சரியான வடிவம் இது.
நன்றி: குங்குமம், 28/4/2017,