மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம்

மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம், இடைமருதூர் கி.மஞ்சுளா, மணிவாசகர் பதிப்பகம், பக்.368, விலை ரூ.300.

;சைவ சமயத்தின் கருவூலமாகத் திகழும் பன்னிரு திருமுறையில் எட்டாம் திருமுறையாக வைத்துப் போற்றப்பெறுபவை மணிவாசகரின் திருவாசகமும் திருக்கோவையாரும். இவ்விரு நூல்களிலும் இடம் பெற்றுள்ள அகமரபுச் செய்திகள் அமைந்த பாடல்களின் நுட்பங்களை ஆய்ந்து எழுதப்பட்ட முனைவர் பட்ட ஆய்வு நூல் இது.

திருவாசகத் தேன் என்பது உலக வழக்கு. இந்நூலாசிரியர், திருவாசகம் மட்டுமல்ல, திருக்கோவையாரும் தேன்தான் என்கிறார். திருவாசகத்தேன் உணவாகவும், திருக்கோவையார் தேன் மருந்தாகவும் விளங்குகிறது என்று நயம்படக் கூறுகிறார்.

மணிவாசகர் காலம் குறித்து இதுவரை ஆராய்ந்த அறிஞர்கள் கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி, கி.பி.10-ஆம் நூற்றாண்டு வரை ஒவ்வொரு காலத்தைக் குறிப்பிடுகிறார்கள். நூலாசிரியர் தரவுகள் பலவற்றை முன்வைத்து மணிவாசகர் காலம் தேவார மூவர்க்கு முற்பட்டது என்றும் சங்க காலத்திற்கு அடுத்தது என்றும் நிறுவுகிறார்.

ஐந்து இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ள இந்நூலில் மணிவாசகரின் பாக்களில் சைவ சித்தாந்தம் என்ற இயல் மிகவும் சிறப்பானது. குறிப்பாக இந்த இயலில் இடம் பெற்றுள்ள திருவடிச் சிறப்பு, ஐந்தெழுத்து அருமறை ஆகிய தலைப்பிலான செய்திகள் பலரும் அறியாதவை.

பின் இணைப்பாக 96 தத்துவங்கள், எட்டாம் திருமுறையிலுள்ள அகத்துறைப் பட்டியல் ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேற்கோளாகச் சுட்டப்பட்டுள்ள பாடல்கள் அனைத்தும் அருமை.

நூலாசிரியரின் சைவ சித்தாந்தப் புலமையும், மணிவாசகரில் ஆழங்காற்பட்ட நுண்மாண் நுழைபுலமும் இந்நூலைப் படிக்கும்போது தெற்றெனப் புலப்படுகிறது. சைவமும் தமிழும் சமமாய்க் கலந்த விருந்து.

நன்றி: தினமணி, 5/4/21

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *