முல்லை மண்-மக்கள்-இலக்கியம்
முல்லை மண்-மக்கள்-இலக்கியம், வாணி அறிவாளன், அருண் அகில் பதிப்பகம், பக்.200, விலை ரூ.150.
சங்கத் தமிழ் இலக்கண-இலக்கியங்களில் பல சந்தேகங்களும், சிக்கல்களும், முரண்பாடான கருத்துகளும் இருக்கின்றன. அந்தவகையில், முல்லைத் திணைப் பாடல்களில் உள்ள பல வகை சிக்கல்களும் ஐயங்களும் ஆய்வுப் பொருளாகியுள்ளன. அவை களையப்பட வேண்டும் என்ற நோக்கில் ‘முல்லைத் திண‘யில் இருக்கும் ஐயங்களுக்கான விடைகளை இந்நூல் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்துகிறது.
முல்லைத் திணைப் பாடல்கள், உலக இலக்கியங்களான கிரேக்க, லத்தீன் முல்லைத் திணைப் பாக்களோடு ஒப்புநோக்கப்பட்டுள்ளது. பல பொருள் தரும் ஒரு சொல் வகையைச் சேர்ந்த ‘தலை, முனை‘ ஆகிய இரு சொற்களுக்கான சங்கப் புலவர்கள், உரையாசிரியர்களின் பொருளையும் தந்து, இவ்விரு சொற்களும் முல்லை நிலத்தைக் குறிப்பதே என்பதைச் சான்றுகளுடன் நிறுவியிருக்கிறார் நூலாசிரியர்.
முப்பதுக்கும் மேற்பட்ட முல்லைநிலப் பெயரீடுகளின் பட்டியல்; மற்ற திணை மக்களுடன் முல்லைத் திணை மக்களே விருந்தோம்பலில் சிறந்தவர்கள் என்பதை விளக்கும் முல்லை விருந்து; நற்றிணையிலும், அகநானூற்றிலும் முல்லை நிலப் பெயர்கள், முல்லை நிலங்கள் அமைந்துள்ள விதம்; முல்லையும் கற்பும் ஒன்றோடொன்று தொடர்புடையன என்பதற்கான எடுத்துக்காட்டு, விளக்கம்; முல்லை பாடிய புலவர்கள், திணைக் கூற்றுகள், பாக்களின் தன்மை முதலிய பலவும் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளன.
முல்லைப் பாக்களின் முதற் குறிப்பு அகராதி, கூற்று வகைகள், கூற்று விளக்கங்கள் ஆகியவற்றுக்கான அட்டவணைகளை இணைத்திருப்பது அரிய பணி. நூல் முழுவதும் முல்லைத்திணை மக்களின் மண் மணமும், முல்லை மலரின் மணமும் வீசுகிறது.
நன்றி: தினமணி, 28/5/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818