நானும் சினிமாவும்

நானும் சினிமாவும், ஏவி.எம். சரவணன், தினத்தந்தி பதிப்பகம், பக்.416, விலை ரூ.250.

திரைப்படத் தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணனின் 60 ஆண்டு கால திரையுலக அனுபவங்களுடன் அவருடைய வாழ்க்கை வரலாறும் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஒரு மகா விருட்சம் அதன் ஆணிவேரிலிருந்து தொடங்குவதைப் போல், தன் தந்தையார் ஏவி.மெய்யப்பனின் குழந்தைப் பருவத்திலிருந்து இந்த நூலைத் தொடங்கியிருப்பது சிறப்பு.

திரையுலகில் சகாப்தம் படைத்த ஏவி.எம். நிறுவனம் உதயமானது முதல், அந்நிறுவனத்தின் தயாரிப்பில் ஒவ்வொரு படத்திலும் கிடைத்த விதவிதமான அனுபவங்களின் தொகுப்பு, விறுவிறுப்பானதொரு நாவலைப் படிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. முதல் மூன்று படங்கள் தோல்வியடைந்த நிலையில், தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்து நான்காவதாக படம் தயாரித்து வெற்றியைப் பெற்ற ஏவி.எம்- இன் அனுபவம் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்குப் பாடமாக விளங்குகிறது.

இந்தியாவின் முதல் டப்பிங் படம் (ஹரிசந்திரா), பின்னணி பாடல் இடம் பெற்ற முதல் படம் (நந்தகுமார்), காந்திஜி பார்த்த ஒரே திரைப்படம் (ராமராஜ்யம்) ஆகியவை ஏவி.எம். பேனரில் வெளியானவை என்பதும், சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், சிவகுமார், கன்னட நடிகர் ராஜ்குமார் ஆகியோர் ஏவி.எம். மூலம் அறிமுகமானவர்கள் என்பதும், ப.நீலகண்டன், கிருஷ்ணன் பஞ்சு, கே.சங்கர், ஏ.சி.திருலோகசந்தர் போன்ற இயக்குநர்களை அறிமுகம் செய்தது ஏவி.எம். என்பதும் திரையுலக வரலாற்றில் முத்திரை பதித்த நிகழ்வுகள்.

இயக்குநர் கே.சங்கர் தேவகோட்டை ஸ்டுடியோவில் (கீற்றுக்கொட்டகை) தீ பற்றிக் கொண்ட போது, வேதாள உலகம்‘ படச்சுருள்களை அள்ளிப் போட்டுக் கொண்டு தப்பித்தது, அரசுப் பணியிலிருந்து விலகி, கலைத்துறையில் முழுமையாக ஈடுபட கே.பாலசந்தர் தயங்கியபோது, 3 ஆண்டுகளுக்கு அவருடைய இயக்கத்தில் படம் தயாரிக்க ஏவி.எம். நிறுவனம் ஒப்பந்தம் போட்டது, எழுத்தாளர் தமிழ்வாணன் மீது பற்று கொண்டு, ‘எம்.எஸ்.வாணன்‘ என்ற புனைபெயரில் நூலாசிரியர் கதை எழுதியது உட்பட பல சம்பவங்கள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

4 தலைமுறைகளாக 175க்கும் மேற்பட்ட திரைப்படங்களை உருவாக்கிய ஏவி.எம். நிறுவனத்தின் வரலாறு, நூலாசிரியர் திரைப்படத் தொழிலை அவருடைய தந்தையிடம் பயின்றது, துணிந்து எடுத்த பல முடிவுகள் என திரைப்படத் தொழில் உலகை நம் கண்முன் தெளிவாகக் காட்டுகிறது இந்நூல்.

நன்றி: தினமணி, 7/5/2018.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/Naanum_Cinemavum.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *