நீர்ச்சுழி
நீர்ச்சுழி, முத்துராசா குமார், சால்ட் வெளியீடு, விலை: ரூ.150.
கைவிடப்பட்டவர்களின் குரல்கள்

மயானக்கொள்ளையின்போது வலம்வரும் புகையிலைக்காரி, வில்லிசைப் பாட்டுக்காரி என்று கைவிடப்பட்ட அல்லது நமது நினைவுகளிலிருந்து மறைந்துபோன, அதிகம் பேசப்படாத மனிதர்களின் குரலைத் துல்லியமாகத் தனது ‘நீர்ச்சுழி’ கவிதைத் தொகுப்பில் பதிவுசெய்திருக்கிறார் முத்துராசா குமார்.
அவருடைய சிறுகதைகளிலும் இதே மனிதர்கள் தங்களின் வாழ்க்கைப் பாடுகளை விரிவாகப் பேசுகிறார்கள். ஆனால், கவிதையில் வெளிப்படும் சின்னச் சின்னத் தருணங்கள் அவர்களின் வாழ்க்கையை, அதன் மகத்துவத்தை மிளிரச் செய்கின்றன. உதாரணமாக, வில்லிசைக்காரி கவிதையை வாசிக்கையில் அவளுடைய இசையைவிட, அவள் உபயோகிக்கும் கருவியைவிட வேறொன்றால் அவள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை உணர முடிகிறது.
மரத்தாலோ கல்லாலோ/ மண்ணாலோ/ வீசுகோல்களைச் செய்துவிடலாம்./ அவளது கரங்களை எதைக் கொண்டு/ செய்வதென்பதுதான்/ பதற்றத்தைக் கூட்டுகிறது.
இவரின் கவிதைகளில் தொடர்ந்து வெளிப்படும் அசேதனங்களின் குரல் பிரமிப்பூட்டுகிறது. அசேதனங்களின் மகத்துவம் எளிய வரிகளில் வெளிப்படும் இடங்கள் நாம் கைவிட்ட இயற்கையின் குரலாக இருக்கின்றன. அதே தொனியில், வயதானவர்களை அடிக்கடி தன் கவிதையின் மையக்கருவாக மாற்றுகிறார். அவர்களின் கடந்த காலத்தைப் பேசுவதில்லை; மாறாக, வயோதிகத்தில் உயிர்ப்புடன் இருக்கும் நிகழ்காலத்தைப் பேசுகிறார். எல்லாவற்றையும் கைவிட்டுவிடுவோம் எனும் அச்சம் முத்துராசா குமாரின் எழுத்துகளில் எப்போதும் தென்படுகிறது.
நம்பிக்கையூட்ட ஆசை ஏற்பட்டாலும் அவர் வெளிச்சமிட்டுக் காட்டும் இடங்கள், அவர் முன்வைக்கும் அவநம்பிக்கை உண்மைதானோ என நம்மையும் நம்பவைக்கிறது.
நன்றி: தமிழ் இந்து, 10/8/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031426_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818