நிலத்தின் மீதான போர்
நிலத்தின் மீதான போர், தேனி மாறன், பூவுலகின் நண்பர்கள் வெளியீடு, விலை: ரூ.60.
ஹைட்ரோகார்பன் திட்டம் , எட்டு வழிச் சாலை திட்டம், மீத்தேன் திட்டம் என அரசின் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் என கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகம் போராட்டக் களமாக மாறியுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் குஜராத், ஒடிசா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, சத்தீஷ்கர் என இந்தியா முழுவதும் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் தங்கள் நிலங்களின் மீது கார்ப்பரேட்டுகள், அரசுடன் கூட்டு சேர்ந்து நடத்தும் போரை மக்கள் வலுவான குரல் எழுப்பி எதிர்த்து வருகின்றன. அத்தகைய போராட்டங்களின் உள்ள தேவையையும், அதன் பக்கம் உள்ள நியாயங்களையும் வாசகர்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டு தேனி மாறன் எழுதிய ’நிலத்தின் மீதான போர்’ என்ற புத்தகம்.
’காட் ஒப்பந்தம்’, உலக வர்த்தக கழகம்’ ஆகியவற்றின் வருகைக்குப் பிறகு வளர்ச்சி என்ற போர்வையில் இந்திய இயற்கை வளங்கள் மீது எத்தகைய ஆக்கிரமிப்புகள் நடத்தப்பட்டன என்பதை தற்போது பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலப் பயன்பாட்டுக் கொள்கை திட்டம் உதாரணமாகியுள்ளது என்பதில் தொடங்கி, நிலப் பயன்பாட்டுக் கொள்கை திட்டத்தின் நோக்கம், அதில் உள்ள பிரச்சினைகள், இத்திட்டத்தின் காரணமாக டெல்டா மாவட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இப்புத்தகங்களிலிருந்து அலசப்பட்டிருக்கிறது. விவசாயத்திற்கான புதிய கொள்கை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியத்தையும், வளர்ச்சித் திட்டங்கள் – நிலவளம் – விவசாயம் இவற்றை மையப்படுத்தி விவசாயிகளிடம் ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலை ஏற்பட வேண்டிய தேவையை ஆசிரியர் வலியுறுத்தி இருக்கிறார்.
மொத்தத்தில் வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நலனுக்காக இந்திய எழை விவசாயிகளின் நலனைப் புறந்தள்ளி மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள திட்டங்களை எளிமையாக விவரித்துள்ளார் நூலின் ஆசிரியர் . இடையிடையே சமீபத்திய அரசியல் போக்கையும் அங்காங்கே சாடியுள்ளார்.
நன்றி: தமிழ் இந்து, 07.01.2020.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818