நிறம் மாற்றும் மண்
நிறம் மாற்றும் மண், இயகோகா சுப்பிரமணியன்; நமது நம்பிக்கை வெளியீடு,பக்.208; விலை ரூ.120.
அமெரிக்காவுக்குப் பலமுறை சென்ற நூலாசிரியர், பயணக் கட்டுரையாக எழுதாமல், அமெரிக்காவில் போக்குவரத்து காவலரின் பணிகள், நீதித்துறையின் செயல்பாடுகள், சிறைச்சாலைகள் செயல்படும் விதம், துப்பாக்கி வைத்துக் கொள்ளும் முறை, கருப்பின மக்களின் வாழ்க்கை முறை, அங்கு வாழும் தமிழரின் பண்பாட்டுச் செயல்பாடுகள், பெண்களின் நிலை, மருத்துவத்துறை செயல்படும் விதம், அரசியல்வாதிகளின் செயல்கள் என அமெரிக்காவின் பல்வேறு முகங்களை நமக்கு விளக்கிச் சொல்கிறவிதத்தில் இந்நூலை எழுதியிருக்கிறார்.
அங்குள்ள நிலைமைகளையும், இங்குள்ள நிலைமைகளையும் விளக்கும் இந்நூல், எதையும் மேலானதாகவோ, கீழானதாகவோ சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எது உயர்ந்த பண்பாடு, எது தாழ்ந்த பண்பாடு என்பதல்ல முக்கியம். எந்த சமுதாயத்துக்கு எது தேவையான பண்பாடு? அது நாட்டுக்கு நாடு மாறுபடும்போது அதன் தன்மைக்கேற்றவாறுதான் நாம் உணர்ந்து வாழ வேண்டும் என்கிறார் நூலாசிரியர்.
இதுதான் சரி, இதுதான் தவறு என்று எதையுமே நூற்றுக்கு நூறு வரையறுத்து முடிவு செய்வது எந்தச் செயலுக்கும், வாழ்க்கை முறைக்கும் சரியாகப் பொருந்தாது என்று சொல்லும் நூலாசிரியர், தனக்கு சரி என பட்டதையும் குறிப்பிட்டுச் சொல்லத் தவறவில்லை.
ஆயிரம் தொழில்நுட்பங்கள், பல்லாயிரம் இயந்திர சாதனங்கள், நுகர்வு வாழ்க்கை என இன்றைய வாழ்வியல் நன்றாக இருந்தாலும், இயற்கையோடு இணைந்து பல ஆயிரம், விஞ்ஞான, மருத்துவ, தொழில்நுட்ப, கலாசார, இலக்கிய, அரசியல் அமைப்பென நாம் வியக்கும் வகையில் ஆக்கிவைத்த, பாரத நாட்டின் அற்புதமான குடும்ப, இன அமைப்புகளுக்கு இணையும், சிறப்பும் – உலகில் எங்கும் நான் காணவில்லை' என்கிறார். பயண நூலாக மட்டும் இல்லாமல், பிறநாட்டின் படிப்பினைகளை உள்வாங்கி நம்மைத் தெளிவுபடுத்தும் நூலாகவும் இது திகழ்கிறது.”,
நன்றி: 10/6/19, தினமணி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818