பார்புகழும் பாம்பன் சுவாமிகள்

பார்புகழும் பாம்பன் சுவாமிகள், கு.சண்முக சுந்தரம், முல்லை பதிப்பகம், பக்.112, விலை ரூ.120.

முருகப் பெருமானின் அருள்பெற்ற மகான், தவத்திரு பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல், குமாரஸ்தவம், ஷண்முகக் கவசம், வேற்குழவி வேட்கை, பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் ஆகியவற்றின் மூலமும் உரையும் இணைந்த பதிப்பு இது.

ஷண்முகக் கவசப் பாடல்கள் ஆற்றல் மிக்கவை. இதற்குமேல் மந்திரம் எதுவுமில்லை என்று வாரியார் சுவாமிகள் இந்தப் பாடல்கள் குறித்து நூலாசிரியரிடம் சிறப்பித்துக் கூறியுள்ளார்.

பாம்பன் சுவாமிகள் அம்மை நோயால் மிகவும் துன்புற்ற சமயத்தில் அவரால் இயற்றப்பட்டதுதான் ஷண்முகக் கவசம். தமிழ் எழுத்துகள் ‘அ’ முதல் ‘ஒள’ வரையுள்ள உயிரெழுத்துகள் பன்னிரண்டுடன் ‘க’ முதல் ‘ன’ வரையுள்ள மெய்யெழுத்துகள் பதினெட்டும் முதலெழுத்தாக அமையும் வகையில் மொத்தம் 30 பாடல்களாக ஷண்முகக் கவசம் உருவெடுத்தது.

இதேபோல, ஆறு திருமுகங்கள், பன்னிரண்டு திருவிழிகள், பன்னிரண்டு திருக்கரங்கள் கொண்டு முருகப்பெருமானுக்கு மொத்தம் 30 உறுப்புகள் இருப்பதையும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஷண்முகக் கவசம் பாடல்களைப் படிக்க சில விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். ஷண்முகக் கவசத்தில் உள்ள 30 பாடல்களையும் அதிலுள்ள வரிசைப்படியே முழுவதுமாகப் படித்து முடிக்க வேண்டும்.

இப்பாடல்களை மனமொன்றி நாளொன்றுக்கு ஆறுமுறை படிப்பவர்கள் நோய்கள், பிரச்னைகள் நீங்கி முடிவில் முக்தியும் பெறுவார்கள் என பாம்பன் சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார். திருக்குறள், கந்தரலங்காரம், திருவாசகம், திருப்புகழ் முதலிய நூல்களை இந்நூல் ஆங்காங்கே ஒப்புநோக்குவதும், ஷண்முகக் கவசத்தை பாராயணம் செய்து பலன் பெற்றவர்களின் அனுபவங்களைப் பதிவு செய்துள்ளதும் தனிச் சிறப்பாகும்.

நன்றி: தினமணி, 2/5/22

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000033292_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.