பாவலரேறு பெருஞ்சித்தனார் பாடல்களின் யாப்பமைதி

பாவலரேறு பெருஞ்சித்தனார் பாடல்களின் யாப்பமைதி, ஜெ. மதிவேந்தன், நெய்தல் பதிப்பகம், பக். 208, விலை 130ரூ.

தனித்தமிழ் இயக்கத்தின் அறிஞர் பெருமக்கள் பலருள் குறிப்பிடத்தக்கவர் பெருஞ்சித்திரனார். இதழாசிரியராகவும் நூலாசிரியராகவும் எழுத்துப்பணியில் அயராது ஈடுபட்டிருந்தவர்.

பெருஞ்சித்திரனாரின் இலக்கிய-இலக்கணக் கூறுகளையும் பாவினங்களையும் இந்நூல் ஆராய்கிறது.

மக்களில் உயர்வு-தாழ்வைப் படைத்தவர்கள் பாவினங்களிலும் யார் எந்தப் பாவினத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வகைப்படுத்தியிருந்தனர். ஆனால், பெருஞ்சித்திரனார் இதைத் தகர்த்தெறியும்படியாக, தமிழிலுள்ள அனைத்துப் பாவினங்களையும் பயன்படுத்திப் பாடினார். மேலும், அவர் பயன்படுத்திய யாப்பு வடிவங்களையே முதன்மைப் பொருளாகக் கொண்டு இந்நூல் அமைந்திருக்கிறது.

20-ஆம் நூற்றாண்டுத் தமிழ்த் கவிதை வரலாறு’ என்கிற முதல் இயலில், பெருஞ்சித்திரனாரின் பாடல்களின் பொருண்மை, அவரது சமகாலச் சமூகம் அவற்றை எதிர்கொண்ட முறைமை, தமிழ் ஈழம் மற்றும் தமிழ்த் திரைப்படத்துறை சார்ந்த நிலைப்பாடு முதலியவை ஆராயப்பட்டுள்ளன. “யாப்பு வடிவங்கள்‘’ என்கிற இரண்டாவது இயல், தமிழ் யாப்பியல், பா, பாவினம், இனவினம் ஆகியவற்றின் போக்கில் பெருஞ்சித்திரனாரின் பாடல்களை ஒப்புமைப்படுத்தி அமைந்துள்ளது. “தொடை நலன்கள்‘’ என்கிற மூன்றாவது இயல், தொடை உறுப்புகளை ஆராய்கிறது.

பெருஞ்சித்திரனாரின் வாழ்க்கைக் குறிப்பு, தனித்தமிழ் இயக்க இதழ்களின் பெயர்கள், அரிய புகைப்படங்கள், பள்ளிப்பாடத்தில் இடம்பெற்றுள்ள பெருஞ்சித்திரனாரின் பாடல்கள் முதலிய பல தகவல்கள் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன.

நன்றி: தினமணி, 28/11/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *