பன்முக நோக்கில் இராமானுசர்

பன்முக நோக்கில் இராமானுசர், பதிப்பாசிரியர்: ப.முருகன், கங்காராணி பதிப்பகம், பக்256, விலை ரூ.160.

உடையவர் என்று போற்றப்படும் ஸ்ரீஇராமானுசர் வேதத்துக்கு எளிய உரை வகுத்தவர். இளையாழ்வார், யதிராஜர், உடையவர், எம்பெருமானார், சடகோபன் பொன்னடி, கோயிலண்ணர், பாஷ்யகாரர், திருப்பாவை ஜீயர், இராமானுசர் ஆகிய எட்டுப் பெயர்களால் இவரை வைணவர்கள் போற்றித் துதிக்கின்றனர்.

இராமானுசரின் ஆயிரமாவது பிறந்த நாள் விழாவை நினைவுகூரும் வகையில், சென்னை அரும்பாக்கம் வைணவக் கல்லூரி தமிழ்த் துறையினரால் தேசியக் கருத்தரங்காக நடத்தப்பட்டு, பன்முக நோக்கில் இராமானுசர் பற்றி 21 பேர் எழுதிய ஆழமான ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கிய இந்நூலில் ஓர் ஆங்கிலக் கட்டுரையும் உள்ளது.

இராமானுசரைப் பற்றி ஆய்வு செய்த அறிஞர் பெருமக்கள் வெளியிட்டிருக்கும் கருத்துகளை அரங்க.இராமலிங்கத்தின் முதல் கட்டுரை விரித்துரைக்கிறது. மறை பொருளான எட்டெழுத்து மந்திரத்தை அனைவருக்கும் வெளிப்படுத்தி புரட்சி செய்த இராமானுசருடைய புரட்சி பற்றி விளக்கும், "புதுக்கவிதையில் புரட்சிச் துறவி என்ற கட்டுரையில், இராமானுசரைப் பற்றி புதுக்கவிதைகள் வடித்த கவிஞர் வாலி, சிற்பியின் கவிதைகளையும், திருமந்திரம், திருக்குறள், திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் போன்றவற்றையும் எடுத்துக்காட்டி விளக்கியிருப்பது புதுமை.

இத்தொகுப்பில் உள்ள அனைத்துக் கட்டுரைகளுமே இராமானுசரைப் பற்றிய தெளிவான, ஆழமான பார்வையை முன்வைத்துள்ளன என்றாலும், இராமானுசர் அருளிச்செய்த ஸ்ரீரங்க கத்யம், இராமானுசரின் பயணங்கள், இராமானுசரின் சமத்துவ நெறி, கீதாபாஷ்யமும் விசிஷ்டாத்வைதமும், வாராய் என் செல்லப்பிள்ளாய், இராமானுசரின் பொதுவுடைமைச் சிந்தனைகள், சாதியத்தைச் சாடிய சமூகச் சிந்தனையாளர் முதலிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.

நன்றி: தினமணி, 19/2/2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *