பெண்மைய வாசிப்பும் அரசியலும்
பெண்மைய வாசிப்பும் அரசியலும், அரங்க மல்லிகா, புலம் வெளியீடு, விலை: ரூ.150.
பெண்மைய வாசிப்பு
பேராசிரியரும், சமூகச் செயல்பாட்டாளருமான அரங்க மல்லிகா விளிம்பு நிலை விடுதலைச் சிந்தனை ஓட்டத்தில் தொடர்ந்து பயணித்துவருபவர். இந்த நூலில் மொத்தம் 18 கட்டுரைகள். அத்தனையும் பெண்ணை மையப்படுத்தியே சுழல்கின்றன. சங்க இலக்கியம் தொடங்கிச் சமகால இலக்கியம் வரை பேராசிரியர் காத்திரமாகக் களமாடியிருக்கிறார்.
தமிழ்ச் சமூகத்துக்கு அவர் புதுப்புதுத் தகவல்களை, தரவுகளை அள்ளியள்ளித் தருகிறார். வரலாற்று மூலமும் தொன்மமும் அவர் கட்டுரைகளில் மிக இயல்பாக வந்து நுழைகின்றன. அவை பண்பாட்டுத் தளத்தில் எவ்வகை மாற்றங்களைத் தமிழ்ச் சமூகத்துக்குக் கையளித்துள்ளன என்பதை இன்றைய வாழ்வியலோடு பொருத்திக் காட்டும் வித்தை அவருக்கு வாய்த்திருக்கிறது. அம்மன் கோயில் இல்லாத கிராமம் தமிழ்நாட்டில் இருக்குமா என்று தெரியவில்லை. தமிழர் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்தது அம்மன் வழிபாடு.
கிராமங்களில் இன்றும் செல்வாக்காகத் திகழும் மாரியம்மன் வழிபாட்டின் நதிமூலம் குறித்துப் பேராசிரியர் பேசுகிறார்.‘சங்க இலக்கியத்தில் திணையும் பெண் அடையாளமும்’ என்றொரு கட்டுரை திணை வகைப்பாட்டைப் புதிய கோணத்தில் கட்டமைக்க முயல்கிறது. ஐவகைத் திணை ஒழுக்கங்களைக் குறிப்பிட்டுப் பேசும் அவர், பெண், பெண்மை, பெண் இயங்கியல் தொடர்பான தந்தைமைச் சமூகச் சொல்லாடல்களின் அரசியலைச் சங்க இலக்கியங்கள் முன்வைப்பதாகக் குறிப்பிடுகிறார்.
அகம் சார்ந்தும் புறம் சார்ந்தும் எழுதப்பட்டுள்ள சங்க இலக்கியப் பாடல்கள் ஆண் – பெண் சமத்துவத்தைப் பற்றிப் பேசவில்லை என்ற குற்றச்சாட்டை அழுத்தமாக வெளிப்படுத்துகிறார்.
நன்றி: தமிழ் இந்து, 20/11/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818