பெரியபுராண வாயில்
பெரியபுராண வாயில், சாமி. தியாகராசன், சிவாலயம், பக்.136, விலை ரூ.120.
சேக்கிழார் பெருமான் இயற்றியருளிய பெரியபுராணத்தில் பாயிரம் என்ற பெயரில் பத்துப் பாயிரங்கள் (பதிகங்கள்) உள்ளன. பாயிரம் என்ற சொல்லுக்கு வரலாறு என்று பொருள். அதாவது, நாயன்மார்களின் வரலாற்றை விரித்துரைப்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம்.
நூலில் சொல்லப்பட்ட செய்திகளைப் பாயிரத்தைப் படித்து சுருக்கமாகத் தெரிந்து கொள்ள முடியும். அதனால், பாயிரம் என்பது கோயிலுக்குக் கோபுரம் போல நூலுக்கு கோபுரமாக (முதன்மையானதாக) அமைகிறது.
சேக்கிழார் பெருமானுக்கு சிவபெருமானே அசரீரியாக “உலகெலாம்” என்று அடியெடுத்துக் கொடுத்த பெரியபுராணத்தில் உள்ள பாயிரப் பாடல்களையும், அவற்றுக்கான அரும்பெரும் விளக்கங்களையும் இந்நூல் எடுத்துரைக்கிறது.
பாயிரம் குறித்த விளக்கம், அதன் பொருள், வகை, பயன் என முதலில் விளக்கப்படுகிறது. பழந்தமிழ் நூல்களிலிருந்து பல்வேறு மேற்கோள்களையும், எளிதாகப் புரிந்து கொள்வதற்காக சிற்சில கதைகளையும் கூறியதோடல்லாமல், தமிழறிஞர்கள் பலருடைய (பாயிரத்துக்கான) உரை விளக்கங்களையும் நூலாசிரியர் தந்திருப்பது சிறப்பு.
“உலகெலாம்” என்ற முதல் பாயிரத்திலேயே சேக்கிழார் பெருமான், சிலம்போசை வழியே சிற்றம்பலவனை வழிபடும் முறை, ஐந்தெழுத்தில் ஆடல்வல்லான் திருநடனம் செய்யும் திறம், புவனங்கள் குறித்த (உலகு) விவரம், ஆன்மாக்கள் மீது இறைவன் கொண்டுள்ள பெருங்கருணை, முதலிய பல்வேறு சைவ சித்தாந்தக் கருத்துகளைக் கூறியிருப்பதை அறிஞர்களின் பதிவோடு எடுத்துரைத்துள்ளார்.
“வீரம்” என்பதற்கான விளக்கம் வெகு சிறப்பு. புனிதர் பேரவைக்கும், திருக்கூட்டச் சிறப்புக்கும் உள்ள வேறுபாடுகளும் சிந்தனைக்குரியவை. மெய்கண்ட சாத்திரச் செய்யுள்களின் வழி பாயிரங்களை விளக்கியிருப்பது நூலாசிரியரின் நுண்மாண் நுழைபுலத்தை வெளிப்படுத்துகிறது. “
நன்றி: தினமணி, 15/2/2021.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031022_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818